பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது சென்னை விமான நிலையம் சுமார் 4500க்கும் அதிகமான ஏக்கரில் அமைய உள்ளது. அதனை மீனம்பாக்கம் விமான நிலையத்தினை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கட்டமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னைக்கு தெற்கே 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இது மும்பை, டெல்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமான பன்னாட்டு விமான நிலையமாகும். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு விமான நிலையமும் இது தான். சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் உள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள சென்னை இப்போது மிக வேகமாக வளரும் தொழில்துறை நகரமாக மாறி வருகிறது. இதனால் இங்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் தள்ளப்பட்டுள்ளது.
இதனை சரிசெய்வதற்கு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன்படி, போதிய இடவசதி கொண்ட பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. அதன்படி, பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன.
இதுதொடர்பாக திமுக எம்.பி கனிமொழி சோமு மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்கு பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார்.
மிகப்பெரும் பரப்பளவில் நிலம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் அமைந்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 4,791 ஏக்கருக்கு மேல் நிலம் கண்டறியப்பட்டது. சென்னை விமான நிலையம் 1400 ஏக்கரில் அமைந்துள்ள நிலையில், பரந்தூரில் அதற்கு 3 மடங்கு அதிகமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2,605 ஏக்கர் ஈரநிலப் பிரிவின் கீழ் வருகிறது, மீதமுள்ள 827 ஏக்கர் வறண்ட நிலமாக கருதப்படுகிறது. இங்கு இணையான ஓடுபாதைகள் கட்டப்பட வேண்டுமானால் கூடுதலாக 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
3 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது. அதேவேளையில், புதிதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 72 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் பரந்தூரில் இருந்து சென்னை மாநகருக்குள் வர அதிக நேரம் எடுக்கும். அதே வேளையில் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் இருந்து 15 கிமீ தொலைவில் பரந்தூர் அமைந்துள்ள நிலையில், விரைவில் கட்டப்படும் புதிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் இருந்து வெறும் 3 கிமீ தொலைவில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது.
விமான நிலையத்திற்கான நிதி ஆதாரம்!
சென்னை விமான நிலையம் ரூ.2,500 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இது நகரின் எதிர்கால விமானப் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் போகலாம் என்றும். அதற்கான கூடுதல் வசதிகளைச் சேர்க்க வளாகத்தைச் சுற்றி இடமில்லாத நிலையிலும் 2வது விமான நிலையத்தை விமானப் போக்குவரத்து நிபுணர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி தற்போது பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இதற்காக ’டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதி ஆகியவற்றைக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு!
புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா