சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூடூத் கருவியை பயன்படுத்தி காப்பியடித்ததோடு, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 29 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நந்தம்பாக்கம் எம்.எச். சாலையில் அமைந்துள்ள ராணுவப் பள்ளியில் பாதுகாப்புத் துறையில் கீழ்நிலை பணிக்கான குரூப் – சி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமாக 1,728 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இதில் கலந்து கொண்ட ஹரியானாவைச் சேர்ந்த 28 பேர், வசூல் ராஜா பட பாணியில் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி மூலம் கனெக்ட் செய்து தேர்வு மையத்துக்கு வெளியே இருந்த நபர்களின் உதவியுடன் விடைகளை எழுதியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் சஞ்சய் என்பவருக்குப் பதில் வினோத் சுக்ரா என்பவர் ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதியுள்ளார்.
இதனைக் கண்டுபிடித்த தேர்வு கண்காணிப்பாளர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைகேடாகத் தேர்வு எழுதிய 29 பேர் மீதும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய ப்ளூடூத் கருவி காதின் உள்ளே வைக்கப்பட்டால் தெரியாத அளவில் சிறிய வடிவத்தில் இருப்பதாகவும் அது சிறிய ஆண்டெனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், அவர்களை கைது செய்த போலீசார், தேர்வு எழுதப் பயன்படுத்திய ப்ளூடூத் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
வழக்குப்பதிவு செய்ததன் மூலம் அவர்களால் மீண்டும் பாதுகாப்புப் பணிக்கான தேர்வு எழுதமுடியாது. பின்னர் கைது செய்யப்பட்ட 29 பேரையும் போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 28 பேர் எவ்வாறு ப்ளூடூத் கருவியைப் பயன்படுத்தித் தேர்வு எழுதினார்கள்.
இதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தேர்வில் கலந்து கொண்ட வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா மற்றும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம்
கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட டெல்லி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 8 பேரை சிபிஐ கைது செய்தது.
தமிழில் முதல் இடம் பிடித்த ஹரியானா மாணவர்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு தபால் துறையில் போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணியாளர்களுக்கான நடைபெற்ற தேர்வில் ஹரியானவை சேர்ந்த மாணவர்கள் தமிழில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் கூறுகையில், ”தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எங்களுக்கே தமிழ்த் தேர்வு கடினமாக இருந்தது. அப்படி இருக்கையில் ஹரியானா மாணவர்கள் எப்படி முதல் மதிப்பெண் பெற முடியும்” என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோனிஷா
சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி?
முலாயம் சிங் யாதவ் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
தெற்கு ரயில்வேயின் தாம்பரம் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவரிடம் ரயில் பயணத்தின்போது பேச்சுக் கொடுத்தேன். ஒரு அதிச்சி தகவல் சொன்னார். இப்போது எங்க ஆபிசில் நாங்க மைனாரிட்டி எந்று. சொன்னவர் தமிழர். வங்கிகளிலும் ரயில் நிலையங்களிலும் வட இந்தியர்கள் வந்து உட்்கார்ந்துகொண்டதால் சரிவர தகவல்கள் கிடைக்காமல் பொது மக்கள் சிரமப்படுகிறார்கள்.போட்டித் தேர்வுகள் எந்றாலே இனி இப்படித் தான் நடக்கும். தில்லு முல்லுகள் தொடரும். கோடிக்கணக்கில் கோச்சிங் சென்டர்கள் பணம் சம்பாதிக்கும். ஒரே இந்தியா என முழக்கமிடும் மத்திய அரசின் மாபெரும் சாதனைகளில் இதுவும் ஒன்று.