சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கொள்ளையன் ஒருவன் போலீசாரிடம் சத்தியம் கேட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த 13ம் தேதி 31.7 கிலோ நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் அதே வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. முருகன், பாலாஜி, செந்தில், சந்தோஷ், சூர்யா உள்பட 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 6.24 கிலோ தங்க நகைகள் அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகை அமல்ராஜ் வீட்டுக்கு எப்படி சென்றது என்பதை கொள்ளையர்களுள் ஒருவனான சந்தோஷின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சத்தியம் வாங்கிய சந்தோஷ்!
இதுகுறித்து சந்தோஷிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர், ”நான் நடந்ததை சொல்லி விடுகிறேன். ஆனால் எந்த சூழ்நிலையிலும் எனது சகலபாடியான இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. அதற்கு நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும்” என்று கோரியுள்ளார். போலீஸாரும் உண்மையை சொன்னால் நீ சொல்வதை போல் நடந்து கொள்கிறோம் என்று சத்தியம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சந்தோஷ்“ எனது மனைவி ஜெயந்தியும், அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி இந்திராவும் சகோதரிகள். வங்கியில் இருந்து கொள்ளையடித்த தங்க நகையில் 3.5 கிலோ நகைகளை தனது மனைவி மூலம் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் கொடுத்து வைத்தேன்” என்று கூறியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது!
இதைதொடர்ந்து அச்சரப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ நகைகளை விரைந்து சென்று தனிப்படை போலீசார் மீட்டனர். அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா, கொள்ளையன் சந்தோஷின் மனைவி ஜெயந்தி ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் மொத்தம் 6.24 கிலோ தங்க நகைகள் பதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மீதமிருந்த நகையும் அமல்ராஜ் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.
கூடுதல் காவல் ஆணையர் அன்பு பேட்டி!
இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 31.7 கிலோ தங்க நகைகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையர்களுள் ஒருவரான சந்தோஷின் செல்போன் எண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில் தான் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னை காவல்துறை நடவடிக்கையால் பெருமிதம்!
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வங்கி கொள்ளை வழக்கில் நேரடி தொடர்பில்லை என்றாலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என தெரிந்தும் அதை மறைத்து வைத்ததற்காக அவரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த காவல்துறையினரையும் குற்றநோக்கில் பார்ப்பது தவறு. மாறாக குற்றம் நடந்த 30 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்து, தங்க நகைகள் மீட்ட சென்னை காவல்துறையின் நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அரும்பாக்கம் வங்கி கொள்ளை : எத்தனை இடங்களில் எவ்வளவு தங்கம் மீட்பு – முழு விவரம்!