மதுரை மணி நகரத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது, சிறுமியின் தலை பாத்திரத்துக்குள் மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மணி நகரத்தை சேர்ந்த 2 வயது சிறுமி அஸ்வினி. குழந்தை தனது இல்லத்தில் நேற்று (நவம்பர் 6) விளையாடிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை பாத்திரத்துக்குள் மாட்டிக்கொண்டது.

இதனால், குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் தலையிலிருந்து பாத்திரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால், பாத்திரத்தைக் குழந்தையின் தலையிலிருந்து அகற்ற முடியவில்லை.
உடனடியாக குழந்தையின் பெற்றோர்கள், மதுரை தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு பணியிலிருந்த தீயணைப்புத் துறையினர் அந்த பாத்திரத்தை சிறிய கத்தரிக்கோலால் வெட்டி, பாத்திரத்தை குழந்தையின் தலையிலிருந்து அகற்ற முயன்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை தீயணைப்புத்துறை அதிகாரிகள் அகற்றினர். குழந்தைக்கு தலையில் எந்தவித பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை.

இதனால், குழந்தையின் பெற்றோர்கள் தீயணைப்புத் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும், அப்பகுதி மக்களும் தீயணைப்புத் துறையினரை பாராட்டினர்.
வீட்டில் விளையாடும் குழந்தைகளை பாத்திரங்களை வைத்து விளையாடாதாவாறு எச்சரிக்கையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரை கூறினார்கள்.
குழந்தையின் தலை பாத்திரத்துக்குள் சிக்கி, மீட்க போராடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செல்வம்