தினமும் காலையில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை பார்க்க/படிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 18) ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளார் சிவ்தாஸ் மீனா, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களை நேரடியாக சந்தித்து அரசு திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அலுவலர்களாகிய நீங்கள் அளித்து வரும் சிறப்பான செயல்பாட்டினால், இந்த அரசு பொறுப்பேற்றது முதல் வகுத்துத் தரும் திட்டங்கள் சீரிய வகையிலும், பொதுமக்கள் போற்றும் வகையிலும் அவர்களை சென்றடைந்து வருகின்றன.
குறிப்பாக கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் உங்கள் அனைவரின் பங்களிப்பால் திறம்பட செயலாக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன் அவர்களது வங்கிக் கணக்கில் இரண்டாவது தவணைத் தொகையையும் வரவு வைக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
இது மட்டுமல்ல மக்களைத் தேடி மருத்துவம், முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களும் மக்களைச் சென்றடைந்துள்ளது.
இன்றைய ஆய்வுக் கூட்டத்தின் போது நாம் முக்கியமான திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். மாநகராட்சி சாலைப், பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளைக் குறித்தும் நாம் ஆய்வு செய்தோம்.
இவ்வகை திட்டப்பணிகள் குறிப்பாக சாலைப் பாலங்கள், சமூகநலத் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றித் தருவது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.
பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவதை காண முடிந்தாலும், ஒருசில பணிகளில் தொய்வு இருந்ததையும் நாம் கவனித்தோம். அதற்கான விளக்கத்தையும், அது குறித்து என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், துறைத் தலைவர்களும் தெரிவித்தார்கள். இந்த பணிகளை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேலும் அவர், “ தினமும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊடகங்களை தொடர்ந்து காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். நீங்கள் பார்க்கவேண்டும்.
அப்படி பார்த்தால்தான். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை? என்பதை நீங்கள் உடனடியாக மாவட்டங்களைப் பற்றி புரிந்துகொள்ள முடியும்.
அப்படி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்தவகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
தினமும் காலையில் முதல் duty-ஆக இதை வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
பிரியா
“விஜய் படம் என்றாலே ஏதோ ஒரு பிரச்சினை” : லோகேஷ் கனகராஜ்
மருத்துவமனை தாக்குதல் இஸ்ரேல் செய்யவில்லை- ஐஎஸ்ஐஎஸ் சை விட கொடியது ஹமாஸ்: அமெரிக்க அதிபர்
ரோகிணி தியேட்டரில் லியோ வெளியாகுமா?