வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது என்று சத்குரு கூறியுள்ளார்.
ஈஷா சார்பில் 77-வது சுதந்திர தினம் ஆதியோகி சிலை முன்பு இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சத்குரு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் நம் தேசம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.
உலகில் வேறு எந்த தேசமும் இந்தளவிற்கு அதிக வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தது இல்லை எனலாம்.
நம் தேசம் ஆக்கிரமிப்பில் இருந்த சமயத்தில் நம்முடைய கல்வி, பொருளாதாரம், தொழில் திறன் என பல தளங்களில் சீரழிவுக்கு உள்ளானது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 97 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், 1947-ம் ஆண்டு அது வெறும் 3 சதவீதமாக குறையும் அளவிற்கு நம் கல்விமுறை பறிக்கப்பட்டது.
இவ்வளவு இன்னல்களையும் கடந்த நம் தேசம் படிப் படியாக பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. ஒரு தேசத்தின் வளர்ச்சியை பல காரணிகளை கொண்டு அளவிடலாம். அதில் மிக முக்கியமாக நான் கருதுவது மனிதர்களின் வாழ்நாள் ஆயுட்காலத்தை தான். சுதந்திரம் அடையும் போது நம் தேசத்தின் சராசரி வாழ்நாள் ஆயுட்காலம் வெறும் 28-ஆக இருந்தது. அது இப்போது 73 ஆக உயர்ந்துள்ளது. நம் தேசம் பல விதங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் பல விஷயங்களில் வளர வேண்டியதும் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் வெறும் அரசியல் தேசமாக மட்டும் இருந்தது இல்லை. மனிதர்களின் வாழ்விற்கு மிக முக்கியமாக இருக்கும் அறிவியல், கணிதம், கலாச்சாரம், இசை, வானியல் என பலவற்றை உலகிற்கு அளித்த மாபெரும் நாகரீகமாக நம் தேசம் சிறந்து விளங்குகிறது. இதில் பலவற்றை நாம் முறையாக ஆவணப்படுத்தவில்லை அல்லது உலகிற்கு சரியான முறையில் எடுத்து கூறவில்லை.
தற்போது தேசத்திற்குள்ளும் தேசத்திற்கு வெளியிலும் இருக்கும் பலர் இது குறித்து எழுத துவங்கியுள்ளனர். குறிப்பாக, பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உலகிற்கு நம் பாரதம் வழங்கியுள்ள பங்களிப்பை பதிவு செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். பாரத தேசத்தில் தோன்றிய கணிதம் தான் தற்போதைய பல அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் முதுகெலும்பாக இருக்கிறது என சர்வதேச விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்போது பலர் அதிக காலம் உயிர் வாழ்வதற்கு உதவியாக இருக்கும் அறுவை சிகிச்சை முறை நம் தேசத்தில் சுசுருதர் போன்றவர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவை அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம் தேசத்தில் சிறப்பாக இருந்துள்ளது. ஆனால், கடந்த 800, 900 ஆண்டுகளில் இவை எல்லாம் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியது. வேறு எந்த தேசத்திலும் இந்தளவிற்கு சேதம் நடைபெறவில்லை.
பொதுவாக இனப்படுகொலைகள் போன்றவற்றை பற்றி பேசும் போது, செங்கிஸ்கான் பற்றி பேசுவார்கள். சமீபத்திய கொடூரங்களை பற்றி பேசும் போது, அமெரிக்க பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மற்றும் ஆப்பிரிக்க மக்கள் அடிமைப்படுத்த வரலாறு, ஹிட்லரின் கொடுமைகள் குறித்தும் பேசுவார்கள். ஆனால், இவற்றையெல்லாம் விட மிக அதிகளவிலான கொலைகளும் கொடுமைகளும் நம் பாரத தேசத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாம் நம் கலாச்சாரத்தை தக்க வைத்து கொண்டுள்ளோம்” என்றார்.
A Great Nation is built with Great People. This is the relentless effort we need to make in the coming years: building individuals who are physically robust, mentally unassailable, and brimming with skills. #IndependenceDay #SadhguruQuotes pic.twitter.com/t9XP7tR65U
— Sadhguru (@SadhguruJV) August 15, 2023
மேலும், “உலக அளவில் சிறந்து விளங்கும் 500 பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். மற்ற தேசத்தை ஆக்கிரமிக்கும் மனநிலையிடன் அவர்கள் இந்த பொறுப்புகளை அடையவில்லை. எல்லோரையும் அரவணைக்கும் பண்பாலும், திறமைகளாலும் இப்பொறுப்புகளை அவர்கள் அடைந்துள்ளார்கள். இது தான் முன்னேற்றத்திற்கான சிறந்த வழி.
ஆக்கிரமிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இது அரவணைப்பதற்கான காலம். நம் தேசத்தில் தோன்றிய அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம், இசை என எல்லாவற்றின் மூலம் உலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாள் அல்லது துப்பாக்கியால் உலகில் தாக்கம் ஏற்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. குறிப்பாக, பாரதத்தில் தோன்றிய யோகாவின் மூலம் பெரும் தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.
நம் பிரதமரின் முயற்சியால் யோகா உலகளவில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் யோகா செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் என்று யாரும் கற்பனை செய்து கூட பார்த்து இருக்கமாட்டார்கள்.
நம் பாரத தேசம் தற்போது பல வழிகளில் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்ற பயணத்தில் தமிழ் மக்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். நம்மிடம் அந்த திறமையும், வாய்ப்பும் உள்ளது. இந்த 77-வது சுதந்திர தினத்தில் அனைவரும் இதற்கான உறுதியை எடுத்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
சுதந்திர தின விழா: புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்