’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’எபெக்ட்: ஒரு லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்!
முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ (The Elephant Whisperesrs) ஆவண குறும்படத்தில் நடித்த முதுமலை தம்பதி பொம்மன் – பெள்ளி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மார்ச் 15 ) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து ’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் எடுத்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற விழாவில் ’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததன் பேரில், முதுமலையில் இருந்து மைசூரு வழியாக பாகன் மனைவி பெள்ளியை கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்னைக்கு நேற்று (மார்ச் 14 ) அழைத்து வந்தனர்.
இதேபோல் தாய் யானைகளை இழந்த குட்டி யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக சென்ற பாகன் பொம்மன், தருமபுரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதுமலை தம்பதி பொம்மன் – பெள்ளி வாழ்த்து பெற்ற போது, முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாம் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ முதல் ‘அவதார்’ வரை…எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?