ராயபுரத்தில் தெருநாய் கடித்தவர்கள் 5 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றுத் திரியும் மாடுகள் மக்களை அச்சுறுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சென்னை வாசிகளை அதிர்ச்சியடைய செய்தது. இந்நிலையில் தற்போது தெரு நாய்கள் தொல்லை சென்னையில் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக அச்சுறுத்தி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயபுரத்தில் 27 பேரை தெருநாய் கடித்தது. ராயபுரம், ஜி.ஏ. சாலை எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய் ஒன்று அங்கிருந்த பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
சிறுவர்கள் உட்பட 27 பேரை தெரு நாய் கடித்தது. நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டனர்.
இதனிடையே அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த நாயை அடித்து கொன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக நாயை எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனால் நாய் கடித்தவர்கள் 5 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “ராயபுரத்தில் மக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் உள்ளது என்று பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய் கடித்தவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் 2வது டோஸ் தடுப்பூசி ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று போடப்பட்டுள்ளது.
சட்ட சிக்கலால் தெருநாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்லக் கூடாது, கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலே விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இது குறித்து உயர்நீதிமன்றம் செல்ல உள்ளோம்.
அதேபோல் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வருடம் வரை நாயை கருத்தடை செய்யக் கூடாது எனவும் சட்டவிதிகள் கூறுகின்றன.
இதில் கருத்தடை செய்யாமல் விடப்படும் ஒரு நாய் சுமார் 6 முதல் 7 குட்டிகளை ஈன வாய்ப்புண்டு. இதனால் மீண்டும் தெருக்களில் நாய்களின் கும்பலாக சுற்றித் திரியும். இதுவரை சென்னை மாநகராட்சியில் மட்டும் 8 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நாய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது சென்னையில் 3 புதிய கருத்தடை மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 16 ஆயிரம் தெருநாய்களுக்கும், இந்த வருடம் 17,813 தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 13,486 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.
ஆனாலும் தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டால் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
கால்நடை பாதுகாப்பு ஆர்வலர்கள் சிலர் தெரு ஓரங்களில் பட்டினியாக கிடக்கும் நாய்களுக்கு உணவை அளித்துவிட்டு, பெரும் நன்மை செய்துவிட்டதாக கருதி சென்று விடுகின்றனர். ஆனால் உண்மையான கால்நடை ஆர்வலர்களாக இருந்தால், நாய்களை தத்தெடுத்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையேல் பாதுகாத்து, பராமரித்து, நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை.
வாகன ஓட்டிகள் நாய்கள் துரத்தும் போது எப்போதும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். நாய்கள் பதட்டத்தை உணரும் தன்மை கொண்டவை. வாகனத்தை மெதுவாக ஓட்டி செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ராயபுரம், கல்மண்டபம், எம்.சி. ரோடு, ஜி.ஏ.ரோடு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் 2 நாட்களாக பிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் தான் தெரு நாய்கள் தொல்லை என்று நினைத்தால் தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் இதே பிரச்சனை தான்.
திருநெல்வேலி 36வது வார்டில் மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் குறித்து வார்டு உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கடிக்கும் நாய்களின் பெயர், வயது, குணம், எத்தனை பேரை இதுவரை கடித்துள்ளது என்று புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை பார்த்தாவது மநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!