வயநாடு நிலச்சரிவில் 95 பேர் பலி… ரூ.5 கோடி நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

இந்தியா தமிழகம்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது.

மேம்பாடி , முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏறத்தாழ 400 குடும்பங்கள் சிக்கியிருப்பதாக கேரள பத்திரிகையான மனோரமா தெரிவித்துள்ளது.

மண்ணில் புதையுண்டு இதுவரை 95பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 100க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முண்டக்கை பகுதியில் அதிகாலை 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அங்கு மீட்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்ததாக , ​​அதிகாலை 4 மணியளவில் சூரல்மலையில் உள்ள பள்ளி அருகே நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த பள்ளியில் ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இந்த நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேம்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவில் இன்றும் நாளையும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வயநாட்டில் ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்தே இந்த பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே மீட்புப் பணியில் தீயணைப்பு துறை, காவல்துறை, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம் ஆகியவை ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது 50 பேர் கொண்ட கடற்படை குழுவும் கேரளா விரைந்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில்  தோண்ட தோண்ட உடல்கள் மீட்கப்படுவதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக ரூ. 5 கோடி ரூபாய் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கீ.சு. சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக கேரளாவுக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

போதைப்பொருள் கடத்தல் : திமுக நிர்வாகி நீக்கம்!

Paris Olympics 2024: இந்தியாவுக்கு 2வது பதக்கம்… மனுபாக்கர் வரலாற்று சாதனை!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *