கொம்பன் என்னும் பெண் வம்பன்… என்கவுன்ட்டர் பின்னணி இதுதான்!

தமிழகம்

திருச்சியின் பிரபல ரவுடியான கொம்பன் என்கின்ற ஜெகதீசன் நேற்று முன்தினம் நவம்பர் 22 ஆம் தேதி, திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் சிறப்பு படை போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

திருச்சி அருகே சனமங்கலத்தில் நடந்த இந்த என்கவுன்ட்டர் வழக்கமான மனித உரிமைப் புகார்களையும் சற்று அதிகமாகவே எழுப்பியிருக்கிறது. சட்டப் பாதுகாப்புப் படை என்ற அமைப்பு இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.

யார் இந்த ஜெகன்? எப்படி கொம்பன் ஜெகன் ஆனார்? ஏன் கொல்லப்பட்டார்?

மாமா காட்டிய வழி…

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகில் பனையகுறிச்சி பகுதியில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் முத்துசாமி – சரஸ்வதி தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்த மகன் தங்கவேல், இளைய மகன் ஜெகதீசன். தங்கவேல் திருச்சி பட்டாலியன் 1 இல் போலீஸாக இருந்தார். ஆனால் தம்பி ஜெகதீசனோ ரவுடியாகிவிட்டார்.

ஜெகதீசனின் மாமா பாலு, திருச்சி ரவுடி குணாவுடன் இருந்தபோது , ஏரியாவில் பாலுவை பார்த்தால் பலரும் பயப்படுவார்கள். மாமா பாலுவின் அதிரடி செயல்பாடுகள் ஜெகதீசனை சிறுவயதிலேயே ஈர்த்ததால் மாமாவை போல ரவுடியாக வேண்டும் என்பதை லட்சியமாக்கிக் கொண்டார். அதனால் மாமாவிடம் ரவுடி குணாவை பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் ஜெகதீசனை குணாவிடம் அழைத்துச் சென்ற பாலு, ‘என் மாப்ளை’ என்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு முறை ரவுடி குணாவை பார்த்துவிட்டு வந்ததுமே ஜெகதீசனின் ஆட்டியூட்கள் மாறிப் போய்விட்டன. அந்த கெத்தில் ஏரியாவில் பெண்களிடம் லவ்ஸ் விடுவது, ஆண்களை முறைப்பது என்று, ‘நானும் ரவுடிதான்’ என்ற ரேஞ்சுக்கு அலப்பரை கொடுத்து வந்தார்.

அரங்கேற்றம்

இப்படி சும்மா சீன் காட்டிக் கொண்டிருந்த ஜெகதீசனுக்கு ‘அரங்கேற்றம்’ 2010ல் அமைந்தது. 2010 இல் நண்பர்களுடன் சேர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால், கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஜெகதீசன் மீது கொலை முயற்சி வழக்கு விழுந்தது. சிறையிலும் அடைக்கப்பட்டார். அப்போது ஜெகதீசனின் வயது வெறும் 17 தான்.

உள்ளே கொஞ்ச நாள் இருந்துவிட்டு வெளியே வந்ததும், சிறை மீதான பயம் போய்விட்டது. அதற்கப்புறம் ஜெகதீசன் ஆக்டிவ்வான ரவுடி ஆகிவிட்டார். கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், வெடிகுண்டு வழக்கு என மொத்தம் 54 வழக்குகள். அதில் கொலை வழக்கு 5, கொலை முயற்சி வழக்கு 10, ஆள் கடத்தல் வழக்கு 2.

சிறைக்குள் கிடைத்த ‘கொம்பன் பட்டம்’!

2015இல் சசிக்குமார் என்ற ரவுடியை கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் போது, மாமா பாலு தனது மாப்பிள்ளை ஜெகதீசனை சிறையில் சந்தித்தார். அப்போது சிறையில் உள்ள ரவுடிகளிடம், ‘என் மாப்ளைப்பா… பத்திரமா பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு வந்தார். அத்தோடு தனது மாப்பிள்ளை ஜெகதீசனிடம், ‘மாப்ளை நீதான் இந்த ஏரியாவுக்கே கொம்பன். உன்னைப் பாத்தாலே எல்லாரும் அலறணும்’ என்று சிறைக்குள் இருந்த ஜெகதீசனுக்கு வெறியேற்றிவிட்டுச் சென்றார். இப்படித்தான் ஜெகதீசன் என்கிற ஜெகன் சிறைக்குள்ளேயே கொம்பன் ஜெகன் ஆனார்.

பெண்கள் மீது பித்து!

வெளியே வந்ததும் வித்யா என்ற பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து அந்தப் பெண்ணுடனே வாழ்ந்தார். அதன் பின் வித்யாவின் தோழியான ஆர்த்தியை மிரட்டி பணிய வைத்து அவரோடும் வாழத் தொடங்கினார். ஜெகனுக்கு பெண் ஆசை விடவில்லை.

திருச்சி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து இருப்பவர்களிடம் சர்வீஸ்க்கு வரும் போன்களில் உள்ள படங்களை ரெக்கவரி செய்து பார்ப்பது, பிறகு சம்பந்தப்பட்ட பெண்களிடம் அந்த படங்களை தவறாக பயன்படுத்துவேன் என்று சொல்லி மிரட்டி நினைக்கும்போதெல்லாம் காம இச்சையை தீர்த்துள்ளார். இதனால் ஏரியாவில் பல பெண்களின் கண்ணீருக்கும் சாபத்துக்கும் ஜெகன் ஆளானார்.

இதுமட்டுமல்ல பல பெரிய இடத்துப் பெண்களின் பெட்ரூமில் எப்படியோ போட்டோ, வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பியூட்டி ஃபார்லர் நடத்தும் பெண்களை மிரட்டி  இதையே செய்துள்ளார். இல்லையென்றால், சினிமாவில் கடத்துவதுபோல் தூக்கிட்டு போய் பாலியல் வன்கொடுமை செய்து அனுப்பிவைப்பார். அதை விட கொடுமை விலைமாதுகளிடம் மாமூல் வசூலிப்பது வரை செய்திருக்கிறார் கொம்பன்.

ரவுடிகளில் கூட பெண்களிடம் கரெக்ட்டாக நடந்துகொள்ளும் பலர் உண்டு. ஆனால் கொம்பன் ஜெகன் காம வெறி பிடித்த மிருகம் என்கிறார்கள் திருச்சி ரவுடிகள் வட்டாரத்தில். இப்படி பெண்களை வேட்டையாடுவது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் சாலையில் வழிப்பறி செய்வது ஜெகனின் ஹாபி.

போலீஸ் வேலையை இழந்த அண்ணன்

ஜெகனின் வழிப்பறியால் அவருடைய அண்ணன் தங்கவேல் தனது போலீஸ் வேலையை இழந்துவிட்டார். அண்ணன் தங்கவேலின் பைக்கில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும். அந்த வண்டியை எடுத்துக் கொண்டு போய், சாலையில் நின்று கொண்டு போலீஸ் போலவே வாகனப் பரிசோதனை செய்வார் கொம்பன் ஜெகன். கார்களில் எடுத்து செல்லும் பணம் பொருள்களை பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்.

இப்படி தொடர் வழிப்பறி நடப்பதை போலீஸார் தீவிரமாக கண்டுபிடித்து கொம்பனை கையும் களவுமாக பிடித்து பைக்கையும் பறிமுதல் செய்து கொம்பனை கைது செய்தனர். அந்த வழக்கில் அண்ணன் தங்கவேல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அன்று முதல் இன்று வரையில் வீட்டில்தான் முடங்கி இருக்கிறார் தங்கவேல்.

குருவிகளோடு உரசிய  கொம்பன்

ஒரு கட்டத்தில் கொம்பனின் செயல்பாடுகள் சாலைகளில் வழிப்பறி என்பதைத் தாண்டி விமான நிலையத்துக்குள் ஊடுருவின.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பணம் பொருட்களோடு ஹவாலா குருவிகள் வெளியே வருவார்கள். அப்படி வரும் குருவிகளை ஃபாலோ செய்து அவர்களிடம் இருந்து பணம், தங்கம் ஆகியவற்றை அடித்துக் கொண்டுபோக ஆரம்பித்தார் கொம்பன்.

திருடு போனது திருட்டு சரக்கு என்பதால் குருவிகளால் கொம்பன் மீது போலீசில் புகார் கொடுக்கவும் முடியாது. அதனால் தங்களுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகளிடம் வாய்மொழியாக சொல்லிவைப்பார்கள். ஒருகட்டத்தில் கொம்பனால் குருவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால்… கொம்பனை போட்டுத் தள்ள குருவிகளே திட்டமிட்டனர். ஆனால், ‘கொலை வரை போனால் தொழில் செய்ய முடியாது’ என்று சில போலீசாரே எச்சரித்ததால் குருவிகள் அந்த திட்டத்தைக் கைவிட்டனர்.

தமிழகம் முழுதும் விரிந்த நெட்வொர்க்!

இப்படியாக கொம்பன் ஜெகனுக்கு திருச்சியைத் தாண்டியும் எல்லை விரிய ஆரம்பித்தது. கொம்பனுக்கு ரவுடிசம் நெட்வொர்க் தமிழகம் முழுவதும் பரந்த அளவில் ஏற்பட்டது. அதற்கு அவர் சமூதாயத்தை சார்ந்த ரவுடிகள் துணையாக இருந்தனர். கூடவே அரசியல்வாதிகள் தொடர்பும் ஆசியும் ஆதரவும் குறுகிய காலத்தில் ஏற்பட்டது.

இவருக்கு திண்டுக்கல் மோகன்ராம், வேலூர் வசூல் ராஜா, சுந்தரபாண்டியன், சாமி ரவி, மண்ணச்சநல்லூர் குணா என தமிழகம் முழுவதும் பெரிய ரவுடிகள் நெட்வொர்க் உருவானது.

இந்த நிலையில்தான் போலீஸார் திருச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் மட்டும் சுமார் நூறு ரவுடிகளின் பட்டியலை சமீபத்தில் தயாரித்துள்ளனர். அதில் கொம்பனும் முக்கியமானவர். கொம்பன் மீதான கடைசி வழக்கு அவரது பிறந்த நாளான மே 19 இல் கத்தியுடன் கேக் வெட்டி களேபரம் செய்தற்காக கடந்த மே 20 ஆம் தேதி போடப்பட்டதுதான்.

பெரிய இடத்துப் பெண்களின் பகை!

கடந்த சில மாதங்களாகவே பெரிய இடத்துப் பெண்கள் சிலரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்திருக்கிறான் கொம்பன். இதில் சில ரவுடிகளே கொம்பன் மீது கோபத்தில் இருந்திருக்கிறார்கள். மேலும் ஜெகனால் விரைவில் திருச்சியில் பெரும் சம்பவம் ஒன்று நடக்கப் போவதாகவும் இன்ட் எச்சரித்தது.

இதையெல்லாம் மோப்பம் பிடித்த ரவுடிகள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அலார்ட் ஆனதால் , எஸ் பி வருண் குமார் ஐபிஎஸ் ஸ்பெஷல் டீம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் எஸ் ஐ வினோத்குமார் தலைமையில் கொம்பன் ஜெகனுக்கு ஸ்கெட்ச் போட்டனர். அந்த ஸ்கெட்ச்சில்தான் திருச்சி அருகே சனமங்கலம் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான் கொம்பன் ஜெகன்.

திருந்தி வாழாமலேயே இருந்திருக்கலாமா? -மனைவி ஆர்த்தி

இந்த நிலையில் கொம்பன் ஜெகனின் மனைவி ஆர்த்தி, “ திருந்தி வாழ விரும்புகிறேன் என்று ஏழு மாதத்துக்கு முன்பே கடிதம் கொடுத்திருக்கிறார் என் கணவர். ஆனால் அவரை உயிரோடு பிடித்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர் காலை உடைச்சிருக்காங்க. கைகளை கட்டிப் போட்டிருக்காங்க. நெஞ்சில முதுகுல எல்லாம் காயம் இருக்கு.
வாரத்துல 5 நாள் கோர்ட்டுக்கு போய் தன் மேல உள்ள வழக்குகளுக்காக ரீகால் பண்ணிட்டிருந்தாரு. ஒழுங்கா கையெழுத்து போட்டுக்கிட்டிருந்தாரு. ஆனா திருந்தி வாழ விரும்பியவரை இப்படி போலியாக சுட்டுக் கொன்னுருக்காங்க. இனிமே உண்மையிலேயே திருந்த நினைக்கிறவங்க கூட எப்படி திருந்துவாங்க?” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

கொம்பன் உடல் கூறாய்வு நடந்த அரசு மருத்துவமனையிலேயே அவனது உறவினர்கள், ‘டூட்டியில் இல்லாத இன்ஸ்பெக்டர் கருணாகரன் எப்படி என் கவுன்ட்டர் செய்யலாம்? கைது செய் கைது செய் கருணாகரனை கைது செய் என்று’ கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

போலீஸ் தரப்பிலோ, ‘கொம்பன் ஜெகன் வீழ்ந்ததில் திருச்சியில் பெண்களுக்கு பெரும் நிம்மதி’ என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்: சென்னை வந்த அஜித்

இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தம்… இன்று முதல் அமலுக்கு வந்தது!

+1
0
+1
1
+1
0
+1
18
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *