நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீனில் உள்ள சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்வு செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கில் சிறையில் இருந்த சவுக்கு சங்கர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை பதிவாளர் உத்தரவின் படி, மதுரையில் தங்கி நாள்தோறும், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து 10 நாட்களுக்கு பிறகு சவுக்கு சங்கர் சென்னையில் கையெழுத்திட அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையேற்று சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டின் முன் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தளர்வு வழங்கப்பட்டது.
தற்போது சவுக்கு சங்கர் மேலும் ஒரு துணை மனு தாக்கல் செய்தார்.
அதில், நாள்தோறும் சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டின் முன் கையெழுத்து இடுவதற்காக நீதிமன்றத்திற்கு தினமும் ஆஜராவதில் உள்ள சிரமம் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு உத்தரவு வரும் வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதே நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
கலை.ரா
அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு!
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: 40 இடங்களில் வழங்க ஏற்பாடு!