தமிழகத்தில் காடுகளின் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை சார்பாக பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காடுகள் பரப்பு 28.3 சதவீதம் இருக்கும் நிலையில் வனத்துறை மூலம் 33% காடுகளின் பரப்பளவை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஈர நிலத்திட்டம் சிறப்பாக செயல்படுவது போல், பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி இன்னும் 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு முதல் கட்டமாக 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
இதன் தொடக்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே இன்று (செப்டம்பர் 24) மரக்கன்றுகள் நட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் 500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடப்படுகிறது. மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விழாவின் மூலம் தமிழ்நாட்டினை பசுமை மாநிலமாக மாற்றிட தொழில் முனைவோர், அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட அனைவரையும் பங்கேற்க செய்து, மக்கள் இயக்கமாக தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தில் செம்மரம், சந்தனம், வில்வம், மந்தாரை, மகிழம், இலந்தை, இலுப்பை, ருத்ராட்சம் போன்ற நாட்டு மரங்கள் நடப்பட இருக்கின்றன.
கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்பட்டதன் எடுத்துக்காட்டாக, 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கலை.ரா