இமாச்சலப்பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இன்று (பிப்ரவரி 12) மீட்கப்பட்டுள்ளது.
முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்துக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி கஷங் நுல்லா பகுதியிலிருந்து சிம்லா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வெற்றி சென்ற கார் சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8 நாட்களாக வெற்றி துரைசாமியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.
விபத்து நடந்த பகுதியிலிருந்த ரத்தக் கறை, திசுக்களை இமாச்சல் காவல்துறையினர் சேகரித்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் அவரது குடும்பத்தினரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனைக்காக இமாச்சலுக்கு அனுப்பப்பட்டது.
இதன் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெற்றியின் உடல் மீட்கப்பட்டிருப்பதாக இமாலச்சல பிரதேச போலீசார் கூறுகின்றனர்.
4ஆம் தேதி காணாமல் போன வெற்றியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு இன்று, விபத்து நடந்த பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கிடைத்துள்ளது.
ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று தேடியதில் வெற்றியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை ரெகாங்புவாவில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வெற்றி சிறந்த ஸ்விம்மர் என்பதால் விபத்து நடந்த அன்று ஆற்றில் நீந்தி எப்படியாவது கரையேறியிருப்பார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கொண்டிருந்த நிலையில், இன்று வெற்றி உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இது சைதை துரைசாமியின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: விசிக கேட்கும் தொகுதிகள்!
“ஆளுநர் உரை ஊசிப் போன உணவு பண்டம்” : எடப்பாடி விமர்சனம்!