தமிழக தொல்லியல் துறையின் கண்டுபிடிப்பு, இந்தியத் தொல்லியல் துறையில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது என உலக தொல்லியல்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ’இரும்பின் தொன்மை’ நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் அவர் பேசுகையில், “தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் 5,300 ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பின் காலம் தொடங்கியது. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும்’ என தெரிவித்தார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் கே.ராஜன் மற்றும் இணை இயக்குநர் இரா.சிவானந்தம் ஆகியோர் இணைந்து இரும்பின் தொன்மை நூலை எழுதியுள்ளனர்.
தமிழக அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளரும், தொல்லியல்துறை ஆணையருமான உதயச்சந்திரன் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.
கி.மு. 4000ல் தமிழ்நாட்டில் இரும்புப்பயன்பாடு!
அதில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வரலாறு பற்றிய ஆய்வு என்பது தொல்லியல்துறையின் முக்கிய பங்களிப்பில் ஒன்றாகும். அறிவியலின் வளர்ச்சி மற்றும் அறிவியலை தொழில்நுட்பமாக கையாளும் அல்லது மாற்றும் தொல் மாந்தர்களின் ஆற்றல் நீண்ட மனித வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது பண்பாடு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியில் ஒரு மிகச்சிறந்த ஊக்கியாக செயல்பட்டு வருகின்றன. கருத்தியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறையில் அந்த கோட்பாடுகளின் பயன்பாடு என்பவை கல்வி உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக கருதப்படுகிறது.
மனித வரலாற்றில் தொழில்நுட்பம் மனித மேம்பாட்டிற்கு பெரும் பங்களிப்பை ஆற்றுவதால் தொல்லியலாரிடையே தொழில்நுட்ப அடிப்படையிலான மனித வளர்ச்சியை அறிந்து கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு தொழில்நுட்பங்களில், இரும்புத் தொழில்நுட்பம் அதன் அதிவேக தாக்கத்தின் காரணமாக சிறப்பு கவனம் பெற்றது.
இரும்புத் தொழில்நுட்பத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரவல் ஆகியன தொடர்பான தேடல் என்பது மனித வரலாற்றில் ஒரு ஊகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில், இரும்புத் தொழில்நுட்பம் ஆசியா மைனரில் கி.மு.1000 ஆண்டுவாக்கில் தோன்றியதாகவும் பின்னர் தொழில்நுட்ப பரவலின் ஒரு பகுதியாக உலகின் பிற பகுதிகளுக்கு விரைவாக சென்றடைந்தது எனவும் கருதப்படுகிறது. இந்த ஒற்றை மய்யப்புள்ளியில் இருந்தே இரும்பு தொழில்நுட்பத்தின் பரவல் ஏற்பட்டது என்ற கோட்பாட்டிற்கு எதிராக தொழில்நுட்பம் பல மய்யப்புள்ளிகளில் தோன்றின என்பதை அண்மைக்காலங்களில் பல அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாடும் தங்களிடம் உள்ள அறிவியல் வளத்தைக் கொண்டு இரும்பின் தொன்மையைக் கண்டறிவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இம்முனைப்பில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. பல உலோகவியலாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தியாவில் இரும்பின் தோற்றத்தை நிறுவ கடுமையாக முயன்று அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில் இரும்பின் தோற்றம் கி.மு. 2000 என நிலை நிறுத்தினர். தமிழ்நாட்டில் இரும்பின் தொடக்ககால பயன்பாட்டைக் கண்டறிந்து அடையாளம் காணும் இந்த கடினமான பணியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் தீவிரமாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் கீழ்நமண்டி, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் ஊக்கமளிக்கும் முடிவை அளித்தன. பல்வேறு தொல்லியல் அகழாய்வுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்குப் பெறப்பட்ட அறிவியல் காலக்கணக்கீடுகள் தமிழ்நாட்டில் இரும்புப்பயன்பாட்டின் தொன்மையை கி.மு. நாலாயிரத்தின் முற்பகுதியில் வைத்தது. இவ்வண்மைக்கால அறிவியல் சான்றுகளை இந்த வெளியீட்டின் மூலம் ஆய்வுலகின் முன் வைப்பதில் நான் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.
கல்வியாளர்கள் இரும்பின் தொன்மையை ஆய்வு நோக்குடன் அணுகி, எதிர்கால ஆய்விற்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இந்த நாட்டின் புகழ்பெற்ற கடந்த காலத்தை நிலைநிறுத்துவதற்கு முயற்சிகளையும் மேற்கொண்ட அனைத்துத் தொல்லியல் ஆய்வாளர்களையும் இந்த நேரத்தில் வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் பகுப்பாய்வு முடிவுகள் வெளிநாடு மற்றும் இந்தியாவில் உள்ள தொல்லியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் பகுப்பாய்வு முடிவுகளை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்மஸ்ரீ திலீப் குமார் சக்ரவர்த்தி :
தெற்காசியத் தொல்லியல் துறை பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாக்கம் குறைவதற்கு வெகுகாலம் ஆகலாம். எனது முதல் எதிர்வினை என்னவென்றால், சமகால சிந்துவெளிப் பண்பாட்டுத் தளங்களில் இரும்பு இருக்கவேண்டும். மேலும் தற்போதைய கண்டுபிடிப்புகளின் மூலம் லோத்தலில், ஹரப்பா பண்பாட்டுச் சூழலில், கிடைத்த இரும்பு பற்றிய அறிக்கை தர்க்கரீதியான விளக்கத்தை இப்பொழுது அளிக்கிறது.
மேலும், மல்ஹார் போன்ற கங்கைச் சமவெளித் தளங்களிலிருந்து கிடைத்த இரும்பு கி.மு. இரண்டாம் ஆயிரத்தின் முற்பகுதியைச் சேர்ந்ததாகும். அந்தக் காலகட்டத்தில் இரும்புத் தொழில்நுட்பத்தின் பரவலாக்கமும் தொடர்பும் அதன் விநியோகமும் சிறப்பாக இருந்ததாகக் கூறுகின்றன. இந்த தொடர்பு பற்றிய தெளிவான புரிதலைப் பெற முயற்சிக்க வேண்டும். இந்தக் கண்டுபிடிப்புக்குக் காரணமான தொல்லியல் ஆய்வாளர்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ஒஸ்மண்ட் போப்போராச்சி :
லண்டன் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் இயக்குநர்
“இரும்பின் தொன்மை பற்றிய இந்தச் சிறுநூலை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். இரண்டு சிறந்த இந்திய அறிஞர்களால் இது எழுதப்பட்டுள்ளது. இது அறிவியல் முறையின் அடிப்படையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய இரும்பு உருக்கும் தளங்களும் துல்லியமான வரைபடங்களின் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் மிகவும் நம்பகமான ஆய்வகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பீட்டா அனாலிட்டிக் ஆய்வகத்தில் High Probability Density Range (HPD) முறையின் அடிப்படையில் கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வரையறுக்கப்பட்ட கால வேறுபாடுகளைத் தெளிவாக வழங்குகிறது. புத்தகத்தில் முன்மொழியப்பட்ட புதிய காலக்கணக்கீடுகள் பழைய முடிவுகளை முழுமையாக மாற்றுகிறது.
‘உலகளாவிய சூழல்’ என்னும் தலைப்பின்கீழ் சொல்லப்பட்டுள்ளவை எகிப்து, அனடோலியா, சீனா, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பா, வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஸ்காண்டிநேவியா பகுதிகளில் இரும்புத் தொழில்நுட்பம் பற்றி இன்றுவரை கொண்டுள்ள காலக்கணக்கீடுகளைப் பகுப்பாய்வு செய்கிறது. கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடக்க கால இரும்பு உருக்கும் உலைகளின் காலத்தை வெகுவாக மாற்றுகிறது. இந்தச் சிறுநூல் உலை வகைகள் பற்றிப் புதிய தகவல்களை வழங்குகிறது. மேலும், அவற்றைப் பண்டைய தொல்பொருள் தரவுகளோடு அண்மைக்கால கண்டுபிடிப்புகளைத் தொல்பொருள் சூழல்களில் மிகவும் துல்லியமாக ஒப்பிடுகிறது.
இந்த ஆய்வின் மிகவும் மகிழத்தக்க முடிவுகளில் ஒன்று, கி.மு.13- 15ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய அதி உயர் கார்பன் எஃகு பற்றியது. எஃகு உற்பத்தி இன்றைய துருக்கியில் கி.மு. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்தவை என்பதை நாம் அறிவோம். எனினும் கதிரியக்கக் காலக்கணக்கீடுகள் தமிழ்நாட்டு மாதிரிகள் காலத்தால் முந்தியவை என்பதை மெய்ப்பிக்கின்றன. பகுப்பாய்வு அட்டவணைகள், அண்மைக்கால தொல்பொருள் அகழாய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஒளிப்படங்கள் ஆகிய பிற்சேர்க்கைகள் மிகவும் பாராட்டத்தகுந்தவை. இரும்பை உருக்கும் தொழில்நுட்பங்களின் வரலாற்றையும், பழங்காலத் தமிழ்நாட்டின் காலத்தையும் பதிவுசெய்தல், ஆவணப்படுத்துதல், விவரித்தல் மற்றும் சூழலுக்குத் தக்க வகையில் அமைத்தல் ஆகியவற்றை ஆசிரியர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

முனைவர் ராகேஷ் திவாரி :
இந்தியத் தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குநர்
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரும்புத் தொழில்நுட்பத்தின் கி.மு. 1800ஐச் சேர்ந்த தொடக்கநிலைச் சான்றுகள் உத்தரப் பிரதேசத்தில் (வட இந்தியா) பல இடங்களில் காணப்பட்டன. இந்தத் தொல்பொருட்களின் தரம், இரும்புத் தொழில்நுட்பம் கி.மு. 3ஆம் ஆயிரத்தில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழங்கியது. இன்று இந்தக் கருதுகோள் தொடர்ச்சியான அறிவியல் காலக்கணக்கீடுகளால் உறுதியாகிறது. இந்தக் கணிப்புகள், பெரும்பாலும் கி.மு. 2500, தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் பல்வேறு தொல்லியல் தளங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புத் தொல்பொருட்களுடன் ஒத்துப்போகின்றன. இந்தியத் தொல்லியல் துறையில் இது ஒரு திருப்புமுனை.
இந்தக் காலக்கணக்கீடுகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் இரும்புத் தொழில்நுட்பத்தின் தொடக்க காலத்தை நிறுவுகின்றன. வடமேற்கு தெற்காசியாவின் சமகால அரப்பா நாகரிகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கி.மு. மூன்றாம் ஆயிரத்தில் தமிழ்நாட்டில் அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ஒரு தனித்தன்மையுடன்கூடிய பண்பாடு வளர்ச்சியடைந்தது என்பதை இது காட்டுகிறது. இந்த ஆய்வில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

பத்மஸ்ரீ கே.பத்தய்யா :
புனே டெக்கான் கல்லூரி முன்னாள் இயக்குநர்
இந்தியாவில் இரும்பின் தொன்மை என்பது நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட தலைப்பு. நீண்ட காலமாக, இது கி.மு. முதலாம் ஆயிரத்தின் தொடக்கம் அல்லது முற்பகுதி என்று கூறப்பட்டுவந்தது. பின்னர் ராஜஸ்தான் மற்றும் உ.பி.யில் உள்ள தொல்லியல் தளங்களின் சான்றுகள் அதை இரண்டாம் ஆயிரம் வரைக் கொண்டுசென்றன. தமிழ்நாட்டின் புதிய சான்றுகள் இப்போது 3-ஆம் ஆயிரத்தின் நடுப்பகுதிக்கு மேலும் பின்னோக்கிக் கொண்டுசெல்கின்றன. சிவகளை தளங்களின் காலங்கள் மிகவும் முக்கியமானவை. மேலும் இவை வெவ்வேறு பொருட்களிலிந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வகங்களில் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது தொல்லியல் கள ஆய்வில் கவனம் செலுத்தி, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலத்தை உள்ளடக்கிய பல அகழாய்வுகளைக் கடந்த இருபதாண்டுகளாக மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு காலகட்டங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கூடுதலாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அனைத்துப்புகழும் தமிழ்நாடு அரசுக்கே!

பத்மஸ்ரீ சாரதா சீனிவாசன் :
பெங்களூரு தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் பேராசிரியர்
பன்னாட்டளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு ஆய்வகங்களுக்கு 14C முதல் OSL காலக்கணக்கீடுகளைச் செய்ய, பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் தளங்களிலிருந்து அகழ்வாய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து அனுப்பி குறிப்பிடத்தக்க முடிவுகளை பெற்றுள்ள தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். இந்த முடிவுகள் தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் தொடக்கக் காலத்தை கூறும் சான்றுகளாக அமைந்துள்ளன. உயர்-கார்பன் எஃகு மற்றும் உட்ஸ் எஃகின் தொடக்கக் கால வளர்ச்சிக்கு சான்றாகவும் உள்ளன. இரும்பு மட்டுமல்லாமல் உயர்-தகர வெண்கலம் முதலான மற்ற உலோகக் கண்டுபிடிப்புகளின் ஆய்வுக்கு அடிகோலி உலோகவியலின் ஒட்டுமொத்தப் பார்வையை மாற்றுமளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது.

பி.ஜே. செரியன் :
கேரள வரலாற்று ஆய்வுக் கழகம் முன்னாள் இயக்குநர்
தமிழ்நாட்டின் இரும்புத் தொழில்நுட்பத்தின் அண்மைக்கால அறிவியல் காலக்கணக்கீடு, கி.மு. 3ஆம் ஆயிரத்திலேயே முன்னேறிய உலோகவியல் பண்பாடு இருந்ததை வெளிப்படுத்துகிறது. இது தென்னிந்தியா அல்லது இந்தியத் துணைக்கண்டத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பு மனித அறிவாற்றல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய நீண்டகால அனுமானங்களுக்குச் சவால்விடுகிறது, மேலும் நிறுவப்பட்ட முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய வலியுறுத்துகிறது.
மனித வரலாற்றைப் பழங்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், செப்புக்காலம் மற்றும் இரும்புக் காலம் என கார்டன் சைல்டின் கருத்துகள் மூலம் பிரித்ததால் இந்த வரிசைதான் இறுதியானது என்று பரவலாகக் கருதப்படுகிறது. இந்த வகைப்படுத்தலை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது. மனித அறிவாற்றல் மற்றும் பண்பாட்டுப் பரிணாமம் ஒரு சீரான அல்லது உலகளாவிய பாதையை ஒருபோதும் பின்பற்றவில்லை. தொழில்நுட்ப மற்றும் பொருளியல் முன்னேற்றங்கள் பல்வேறு மற்றும் அடிக்கடி கணிக்க முடியாத வழிகளில் வெளிப்பட்டுள்ளன. அவை வேறுபட்ட உள்ளூர் வளங்கள், சூழல்கள் மற்றும் தொடர்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோராயமான வரிசைமுறை பெரும்பாலும் ஒன்றின்மீது ஒன்றாக அமைவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் இவை தொடர்ந்தும் இடைநின்றும் சிக்கலான வடிவங்களை வெளிப்படுத்துகின்றன. சில சமயங்களில் சிதைந்தும் அல்லது துண்டு துண்டாகவும்கூட அமைவதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டின் பல்துறைசார்ந்த கூட்டு அணுகுமுறை கடந்த காலத்தை ஆழமாக ஆராய்வதற்கான மதிப்புமிக்க அணுகுமுறையை வழங்குகிறது. நுணுக்கமான அறிவியல் அணுகுமுறையோடு மரபுசார் அறிவைத் தகுந்த மதிப்புடன் இணைப்பதன் மூலம், வரலாற்றைப் பற்றி மேலும் உள்ளடக்கிய மற்றும் நுணுக்கமான புரிதலை வளர்ப்பதற்கான நம்பிக்கையை இது தூண்டுகிறது. மேலும் வருங்கால தலைமுறையினருக்குத் திறந்த மனதோடு அக்கறையுடன் நன்கு வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்க வகை செய்கிறது. தொலைந்து போன கடந்த காலத்தைச் சான்றுகள் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் மீளமைக்கும் தொல்லியலின் சிறப்புக்கு ஓர் அளவுகோலை அமைத்துத் தந்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

பேராசிரியர் கே.பி. ராவ் :
ஆந்திரா தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை முன்னாள் இயக்குநர்
இரும்பிற்கான அறிவியல் காலக்கணக்கீடுகளின் துணைகொண்டு முனைவர் ராஜன் மற்றும் அவரது குழுவினர் செப்புக் காலம் என்பது இரும்புக் காலத்திற்கு முன்பானது என்ற பொதுவான கருத்தை மாற்றுவதில் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கின்றனர்.
மேற்குத் தக்காணப் பகுதியும் அதற்கு அப்பால் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் செம்பு/வெண்கலத் தொழில்நுட்பம் வழக்கத்திலிருந்த போது தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இரும்புத் தொழில்நுட்பம் மேம்பட்டு இருந்தது என்பதை நிரூபிப்பதில் அவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த முடிவுகள் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் காலக்கணக்கீடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை கி.மு. 3000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டவையாக உள்ளன.
தொடக்க கால இரும்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்குத் தேவையான குறிப்புகளை உறுதியாக இது வழங்கப்போகிறது. இந்தப் பணி உறுதியாக இந்தியாவில் தொடக்கக் கால உலோகவியல் பற்றிய நமது புரிதலில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.

முனைவர் அலோக் குமார் கனுங்கோ
இந்திய தொழில்நுட்பக் கழகம், காந்திநகர்
பொதுவாக உலோகங்களின் தொன்மையையும் காலமுறையையும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இரும்பைப் பற்றியும் பேசும் இச்சிறுநூல் நமது கண்ணைத் திறக்கும் நூல் எனலாம். 12 தொல்லியல் தளங்களிலிருந்து பெறப்பட்ட பண்பாடுசார் கண்டுபிடிப்புகள், ஆறு ரேடியோகார்பன் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டு AMS காலக்கணக்கீடுகளுடன் விவரிக்கிறது.
தென்னிந்தியாவில் புதிய கற்காலத்திற்கும் தொடக்க வரலாற்றுக் காலத்திற்கும் இடையில் பண்பாட்டு வெற்றிடம் இல்லை என்ற உண்மையை இது நிறுவியுள்ளது. மேலும், இயற்கை வளம் எவ்வாறு நமது பண்பாட்டு அறிவின் முன்னேற்றத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது புதிய ஆய்வுப்பாதைகளுக்கு வழிவகுத்துள்ளது. அதாவது கி.மு. 3000க்கும் கி.மு. 2500க்கும் இடைப்பட்ட காலம் வரை செம்பும் இரும்பும் வடக்கிலிருந்து தெற்கிற்கோ அல்லது தெற்கிலிருந்து வடக்கிற்கோ விந்திய மலையை ஏன் கடக்கவில்லை என்ற ஆய்வுக்கு அடிகோலியுள்ளது.
மேலும், இது பைரோ-தொழில்நுட்பம், அடிப்படை பொதிவு, ஓரகத்தனிமங்கள், உலோகவியல், உலையியல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பகுப்பாய்வு முறை ஆகிய பல்துறைத் தகவல்களை இணைத்து ஆய்வு செய்யவும், தென்னிந்தியாவின் இரும்புப் பண்பாட்டை கல்விப் பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாகக் கொண்டுவரவும் இந்த நூல் வழிகோலுகிறது.

பேராசிரியர் ரவி கோரிசெட்டார்
தேசிய முன்னிலை ஆய்வகம், பெங்களூரு
கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட தீவிரமான தொல்லியல் அகழ்வாய்வுகளும் பண்பாட்டுக் காலநிலைகளின் அறிவியல் காலக்கணக்கீடுகளும் செம்பு மற்றும் இரும்புத் தொழில்நுட்பங்களின் நீண்டகால வழக்கமான முடிவுகளுக்குச் சவாலாக உள்ளன. மாறுதலுக்கு உட்படாத மண்ணடுக்குகளைத் தாங்கி நிற்கும் தொல்லியல் தளங்களில் கி.மு. மூன்றாம் ஆயிரத்தின் பிற்பகுதியிலிருந்து கி.மு.600 வரை கிடைத்த புதிய காலக்கணக்கீடுகள் செப்புக் காலத்திலிருந்து இரும்புக் காலம் மற்றும் இரும்புக் காலத்திலிருந்து தமிழ்நாட்டின் தொடக்கக் கால வரலாற்றுக் காலம் வரையிலான பண்பாட்டுக் கால வரிசைகளைத் தலைகீழ் மாற்றத்திற்கு உட்படுத்த வழிவகுத்தது. மேலும், தமிழி (தமிழ்-பிராமி) எழுத்தின் காலம் கி.மு. 600 என்ற காலக்கணக்கீடுகள், அசோகர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தென்னிந்தியாவிற்கு பிராமி அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நீண்டகாலப் பார்வைக்கு மற்றொரு சவாலாக அமைந்துள்ளது . இந்தப் புதிய தகவல்கள் மிகுந்த உற்சாகமூட்டுபவை. அதேபோல் கால இட வேறுபாடுகளைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இரும்புக் காலத் தொடக்கத்திற்கும் அதிலிருந்து வளர்ந்த தொடக்க வரலாற்றுக் காலத்திற்கும் வலிமையான சான்றாதாரங்களையும் இவை வழங்கியுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுகளின் மற்றொரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்னவென்றால், உயர்- கார்பன் மூசை எஃகு அல்லது உட்ஸ் எஃகின் தொடக்கம் தென்னிந்தியா என்னும் இதுவரை கண்டறியாத ஆய்வு முடிவை வெளிக்கொணர்ந்ததாகும். இது மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் எஃகு கண்டறியப்பட்ட பின்பு தான் இந்தியாவில் எஃகு தோன்றியது என்பதற்கு எதிரான முடிவு எனலாம்.
தென்னிந்தியாவில் காணப்படும் தரமான இரும்புத்தாது உயர்தர இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றின் தோற்றத்திற்கும் தொடக்க கால வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்தது. மரபு வழி கொண்டிருக்கும் முடிவுகளையும் அல்லது நிறுவப்பட்ட பண்பாட்டு முடிவுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்தும் அல்லது நம்மை கட்டுப்படுத்தும் இன்னும் பல ஆச்சரியங்கள் எதிர்காலத்தில் நமக்குக் காத்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

பேராசிரியர் ரவீந்திர குமார் மொகந்தி
தாகூர் தேசிய ஆய்வாளர்
இந்தியத் துணைக்கண்டத்தில் இரும்புத் தொழில்நுட்பத்தின் பழமைக்கும் அதன் பயன்பாட்டுக்குமான தொன்மைச் சான்றுகளைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. குறிப்பாக வட இந்தியாவில் அதன் பயன்பாடு கி.மு. இரண்டாயிரம் ஆண்டாக இருந்த நிலையில் தென்னிந்தியாவில் அது கி.மு. மூவாயிரம் ஆண்டாகக் கண்டறிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சிந்துவெளி நாகரிகத்தில் இரும்புப் பயன்பாட்டின் தொன்மைச் சான்றுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விதர்பா மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளிலிருந்தும் சில தொன்மையான காலக்கணக்கீடுகள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள தொன்மையான இரும்புப் பயன்பாட்டின் சான்றுகள் பற்றி நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும். பல்வேறுப் பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள இந்தத் தொன்மையான சான்றுகளுக்கிடையே இருக்கின்ற பண்பாட்டுக் கூறுகளையும் இடைவெளியையும் தொடர்புபடுத்தும் சான்றுகளும் இந்தத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் தொன்மைக்கான சான்றுகளும் நமக்கு இன்று மேலதிக விவரங்களுடன் தேவைப்படுகிறது. எனினும், இது சிக்கல் நிறைந்த பலநிலைப்பட்ட முறைகளை உடைய ஒன்றாகவும் இருக்கின்றது. மேலும், தொழில்நுட்பப் பரவல் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்களின் அடிப்படையிலும் இவற்றை அணுகவேண்டும். இதன் பின்னணியில் இரும்பிலிருந்து பிரிக்கப்பட்ட கரிமத்தின் அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகள் அவசியமாகிறது.
இந்த நிலையிலேயே தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மை என்னும் இச்சிறுநூல் இரும்புக் கால ஆராய்ச்சியில் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது வேறெங்கும்விட இந்தியாவில்தான் இரும்பு மிகப் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது. மிகவும் பாராட்டத்தக்க முயற்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கா. இராஜன், முனைவர் இரா. சிவானந்தம் அடங்கிய தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த அயராமல் ஆர்வத்தோடு உழைக்கும் குழுவை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்.