IOC boiler explodes one person dies

சென்னை – ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி!

தமிழகம்

IOC boiler explodes one person dies

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமாகவும் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்திலிருந்த பாய்லர் வெடித்து இன்று (டிசம்பர் 27) விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லருக்கு வரக்கூடிய லூப் லைனில் கசிவு ஏற்பட்டு, எத்தனால் பயன்படுத்தக் கூடிய 50 ஆயிரம் லிட்டர் பாய்லர் வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து நடந்த உடன் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறினர். எனினும் இந்த விபத்தில் சிக்கி காயங்களுடன் 4 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெருமாள் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  விபத்துக்கான காரணம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“எங்கள் நிறுவனத்தில் 12.20 மணியளவில் பாய்லர் வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் ஒரு பாய்லரும், அதைத்தொடர்ந்து மற்றொரு பாய்லரும் வெடித்தது.

இதில் சரவணன், பெருமாள் காயமடைந்ததாகச் சொன்னார்கள். செக்யூரிட்டி பணியிலிருந்தவர்கள் உடனடியாக எங்களை வெளியேற சொன்னார்கள். படுகாயமடைந்தவர்களுக்கு என்ன ஆனது என கேட்டதற்குப் பெருமாள் உயிரிழந்துவிட்டதாக சொன்னார்கள்.

ஒவ்வொரு நாளும் ஆட்களை பிரித்து பணி செய்ய அனுப்புவார்கள், அந்தவகையில் இன்று பாய்லர் வெடித்த பகுதிக்கு 4 பேரை அனுப்பியிருக்கிறார்கள்.

அதில் ஒருவருக்குதான் இப்படி ஆகிவிட்டது” என தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னையில் பெய்த மழை வெள்ள பாதிப்பின் போது எண்ணூர் முகத்துவாரத்தில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்னும் அங்கு எண்ணெய் கசிவு முழுமையாக அகற்றப்படவில்லை.

அதே பகுதியில் இன்று காலை கோரமண்டல் உர தொழிற்சாலையின் குழாயில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.

அதைதொடர்ந்து தற்போது தண்டையார் பேட்டை ஐஓசிஎல் நிறுவனத்தில் பாய்லர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று வடசென்னை பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகளால்  அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அயலான் ஆடியோ லான்ச்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *