தாளவாடி மலைப்பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை வனத்துறையினர் இன்று (ஏப்ரல் 17) மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை அங்குள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தது. காட்டுயானையை பிடிக்க வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜனவரி மாதம் முதல் கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மூன்று முறை கும்கி யானைகள் உதவியுடன் யானையை பிடிக்க முயற்சி செய்து தோல்வியில் முடிந்தது.
நேற்று முன்தினம் இரவு கருப்பன் யானையை பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து சின்னதம்பி மற்றும் மாரியப்பன் யானைகள் கொண்டு வரப்பட்டது.
ஓசூர் வனக்கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜயராகவன் அடங்கிய மருத்துவ குழுவினர் வனத்துறையினருடன் இணைந்து கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு கருப்பன் யானை தாளவாடி அருகே உள்ள மாகாராஜன்புரத்தில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்ததை கண்காணித்த வனத்துறையினர் தோட்டத்தை சுற்றி வளைத்து யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை கும்கி யானை உதவியுடன் மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதனால் யானை கரும்பு தோட்டத்தில் நகர முடியாமல் நின்றது. பின்னர் கருப்பன் யானையை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
செல்வம்
சென்னை-பெங்களூரு இன்று பலப்பரீட்சை: யாருக்கு வெற்றி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!