கோடை ஒருபுறம் வாட்டி வதக்கும் நிலையில், நாக்குக்குச் சுவையைச் சேர்த்தும் உணவுகளையும் ஒருகை பார்ப்பார்கள் நம்மவர்கள். அப்படிப்பட்ட நிலையில் ருசியான இந்த தக்காளி – மணத்தக்காளி ரசம் வைத்து இந்த வீக் எண்டை கொண்டாடலாம். இந்த ரசம், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது.
என்ன தேவை?
பழுத்த தக்காளி – 2 (மசிக்கவும்)
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – சீரகத்தூள், வெந்தயப் பொடி – தலா ஒரு டீஸ்பூன்
பூண்டு – 3 பல் (தட்டவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்புடன் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும் (ஒன்றரை கப் பருப்பு நீர் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், மணத்தக்காளி வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் தக்காளி, பூண்டு, வெந்தயப் பொடி, பாசிப்பருப்பு தண்ணீர், உப்பு, மிளகு – சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு, கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.