தைப்பூசத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்தில் வடலூர் வழியாக கடலூருக்கு இன்று (பிப்ரவரி 11) முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. Thaipusam Special trains
வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது ஆண்டு தைப்பூச விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று (திங்கட்கிழமை) கொடியேற்றம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
சத்திய ஞான சபையில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி மற்றும் 10 மணிக்கும், 12-ம்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்தில் இருந்து வடலூர் வழியாக கடலூருக்கு மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – கடலூர் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06147) முற்பகல் 11.15 மணிக்கு கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்தைச் சென்றடையும். எதிர்வழித் தடத்தில் பிற்பகல் 3.20 மணிக்கு கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கடலூர் துறைமுகச் சந்திப்பு – விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06148) மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இரு வழித்தட ரயில்களும் பிப்ரவரி 11,12,13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரயில்கள் விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் கடலூர் துறைமுகச் சந்திப்பு – விருத்தாசலம் பயணிகள் சிறப்பு ரயில் (வ.எண்.06132) பிற்பகல் 1 மணிக்கு விருத்தாசலம் வந்தடையும். எதிர்வழித்தடத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம் – கடலூர் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06133), கடலூர் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.10 மணிக்குச் சென்றடையும்.
இந்த இரு ரயில்களும் இன்று (பிப்ரவரி 11) முதல் 13-ம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் உ.மங்கலம், நெய்வேலி, வடலூர், குறிஞ்சிபாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் நேற்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.