பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 6) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் தைபொங்கலன்று தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 746 காளைகள் பங்கேற்றுள்ளன.
அதேபோல் காளைகளை அடக்க 297 காளையர்கள் களமிறங்குகின்றனர். மொத்தம் 10 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெல்லும் காளைகளுக்கும், அதை அடக்கும் வீரர்களுக்கும் பைக், கட்டில், பீரோ, ரொக்க பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா