மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இன்று காலை ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.
அதோடு ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் இழுத்துச் சென்று, செண்டர் மீடியனில் உரசி அங்கிருந்து தூக்கிவீசப்பட்டு இருமுறை பல்டியடித்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் காருக்கு முன்னால் வந்த கொய்யாப்பழ வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இருசக்கர வாகனமும் தரதரவென இழுத்து செல்லப்பட்டு சாலையில் நொறுங்கி கிடந்தது. அவர் கொண்டு வந்த கொய்யாப்பழமும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சிதறி கிடந்தன.
அந்த கார் செண்டர் மீடியனில் உரசி தூக்கி வீசப்பட்டதில், எதிர் பக்க 4 வழிச்சாலையில் ஓரமாக பைக்கில் நின்று கொண்டிருந்தவர் மீது மோதியது. இதனால் அவரும் காயமடைந்தார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சாலையில் கிடந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்தில் 8 வயது குழந்தை உட்பட மொத்தம் 6 பேர் பலியாகினர்.
போலீசாரின் விசாரணையில், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கனகவேல், தளவாய்புரம் மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்று காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.
காரில் பயணித்த கனகவேல், அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி, மணிகண்டனின் மகள் சிவ ஆத்மிகா, பழ வியாபாரி பாண்டி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மணிகண்டனின் மகன் சிவாஆத்திக், மகள் சிவஸ்ரீ ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த சிவ ஆத்மிகா, சிவஸ்ரீ இருவரும் இரட்டை குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதோடு இரவு முழுவதும் சாமி கும்பிட்டு, கண் விழித்து இருந்ததால் காலையில் தூக்கக் கலக்கத்தில் காரை ஓட்டியபோது இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.