தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் வாட்டி வதைத்தது. மே மாதத்தின் முதல் வாரத்தில் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் இன்றும் நாளையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்காசி பழைய குற்றாலத்தில் அருவியில் மக்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
இந்த வெள்ளப்பெருக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயதான அஸ்வின் அடித்து செல்லப்பட்டார். சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் எஸ்.பி சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மாசெக்கள் மாற்றமா? பெங்களூரு பயணமா? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!
கோவை வேண்டாம் வேறு சிறைக்கு மாற்றுங்க… நீதிபதியிடம் சவுக்கு சங்கர் புகார்!