தென்காசி மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த வழக்கில் இருவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 31 ) மறுப்பு தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடையில் பள்ளி குழந்தைகளுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்ற முறையில் தின்பண்டம் வழங்க மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் ,சுதா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்கள் பாஞ்சாங்குளம் கிராமத்திற்குள் 6 மாதம் நுழைய தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சுதா, ராமச்சந்திரன் , மகேஸ்வரன் மூவரும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், ராமச்சந்திரன் , சுதா மீது ஏற்கனவே ஒரு தீண்டாமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், மகேஸ்வரன் என்பவர் மட்டும் திருச்சியில் தங்கியிருந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி!
ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம்!