தென்காசியில் காதல் கணவனிடமிருந்து பிரித்துச் செல்லப்பட்ட பெண் மீண்டும் பெற்றோருடனே செல்வதாக ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன்.
இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவருடைய மகள் குருத்திகாபட்டேல்.
நானும் குருத்திகாபட்டேலும் கடந்த 6வருடங்களாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.
இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தார்.
இதனையடுத்து 4-1-23 அன்று நானும் எனது மனைவியும் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம்.
விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், கணவரான என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன்.
இந்நிலையில் கடந்த 14ம்தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா். இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன்.
இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்காக ஜன25ம் தேதி நான், என் மனைவி, தந்தை சகோதரர் விஷால் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினேன்.
ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறினார். இந்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது,
அப்போது நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.
நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேல் கடத்தி சென்று விட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திருமண புகைப்படங்கள் காட்டி குருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர்.
குருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும்.
குருத்திகா-வின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் குருத்திகா-வை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று(பிப்ரவரி 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தென்காசி நீதிமன்றத்தில் குருத்திகாவிடம் பெறப்பட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தென்காசி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், குருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணையில் பெற்றோர் உடன் செல்வதாக தெரிவித்துள்ளார் என்றனர்.
அப்போது மனுதாரர் தரப்பில், குருத்திகா பட்டேல் இடம் பெறப்பட்ட விசாரணை முறையாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனுவை பொறுத்தவரையில் பெண் யாருடன் செல்வதாக தெரிவிக்கிறாரோ அவருடன் தான் அனுப்பப்படுவார் என்று நீதிபதிகள் கூறினர்.
அரசு தரப்பில், குருத்திகா பெற்றோர்கள் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உறவினர்களிடம் குருத்திகாவை ஒப்படைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், குருத்திகா உறவினர்கள் தரப்பில் குருத்திகாவை அழைத்துச் செல்வதாக மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி,
அதனை காவல்துறையினர் முறையாக விசாரணை செய்ய வேண்டும், குருத்திகா பாதுகாப்பு மிக முக்கியம் எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.
கலை.ரா
தமிழக அரசு – ரெனால்ட் நிசான்: ரூ.3,300 கோடி ஒப்பந்தம்!
அதானி குழும பங்குகள் மீண்டும் சரிவு!