ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8) உத்தரவிட்டுள்ளது. tender case plea dismissed against edappadi
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், ’எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்த நிலையில், ’இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி!
அதன்படி மீண்டும் நடைபெற்ற வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார்.
முடிவில், ’லஞ்ச ஒழிப்புத் துறை 2018-ல் நடத்தப்பட்ட தொடக்க விசாரணையில் குறைகள் இல்லை. புதிய விசாரணைக்கு நடத்துவதற்கு எந்த காரணமுமில்லை. ஆட்சி மாற்றம் ஒன்றையே காரணமாக காட்டி புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது’ என கூறி ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கோரப்பட்டது.
சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதன்படி விசாரணை நடத்தலாம்!
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, “லஞ்ச ஒழிப்பு துறையான உங்களை தொடர்ந்து விசாரிக்க தடுப்பது என்ன? நீங்கள் தாராளமாக விசாரிக்கலாமே? சட்டத்திற்கு உட்பட்ட எந்த விசாரணையையும் நீங்கள் தாராளமாக செய்யலாமே?” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
மேலும் ”இந்த விவகாரத்தில் சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதன்படி விசாரணை நடத்தலாம்” என்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!
மழையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: டிவிஎஸ் நிறுவனம்!
tender case plea dismissed against edappadi