தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு இன்று (அக்டோபர் 23) வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், நியாயமான முறையில் ஏலத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரான நடராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல நடவடிக்கைகளை ஏற்று நடத்தும் பொறுப்பு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்திடம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.
அதையேற்ற நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலத்தை கூட்டுறவு சங்கமே ஏற்று நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை திருவல்லிக்கேணி கூட்டுறவுச் சங்கம் சார்பில் இன்று (அக்டோபர் 23) வெளியாகியுள்ளது.
அதில், “தீவுத்திடலில் மொத்தம் 50 பட்டாசு கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எங்களது கூட்டுறவு சங்கம் சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.82.50 லட்சம் செலுத்தப்பட உள்ளது. இதில் 4 கடைகள் மட்டும் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்படும். எஞ்சிய 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கு ஒதுக்கப்படும்.
இதற்கான ஏலம் நாளை (அக்டோபர் 24 பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் வெளிப்படையாக நடத்தப்படும். அதற்கு முன்னதாக மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் யார் அதிக தொகையை குறிப்பிட்டு ஏலம் கோருகிறார்களோ அவர்களுக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்படும்.
அதன்படி, ஏ பிரிவில் 8 கடைகள் அமைக்க ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 2.25 லட்சமும், பி பிரிவில் 17கடைகள் அமைக்க தலா ரூ. 4 லட்சமும், சி பிரிவில் 15 கடைகள் அமைக்க தலா ரூ. 5.60 லட்சமும், டி பிரிவில் 10 கடைகள் அமைக்க தலா ரூ. 3 லட்சமும் குறைந்தபட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சீட்டுக்கட்டு போல் சரிந்த 6 மாடி கட்டடம்… பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
சிறை கைதி சித்ரவதை… டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!