Temple Lifetime Trustee Suspend Case

கோயில் வாழ்நாள் அறங்காவலர் சஸ்பெண்ட் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதகமான முடிவுகளையும் எடுக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 22) உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவர் மீது நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அவரை இடைநீக்கம் செய்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கோவிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, கடந்த 1985ம் ஆண்டு தன்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்தார். கடந்த 40 ஆண்டுகளில் கோவிலின் வளர்ச்சிக்காக அறங்காவலர்களின் சொந்த நிதியில் இருந்து  கிணறு தோண்டுதல், குழாய் இணைப்புகள்,  மின் விளக்குகள், கோவில் மலைக்கு செல்ல நடைபாதை, அன்னதான மண்டபம் உள்ளிட்டவற்றை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 – 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற, நான்கு பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையருக்கு கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பினேன்.

இதற்கிடையே இணை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கோவிலுக்கு செயல் அலுவலரை அறநிலையத் துறை ஆணையர், கடந்த ஆண்டு அக்டோபரில் நியமித்தார். அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

Temple Lifetime Trustee Suspend Case

எனினும் 4 வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது தாமாக முன்வந்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த நிலையில், தனக்கு வயதாகி விட்ட நிலையில், வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கும் வரை, கோவிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவரை தற்காலிக அறங்காவலராக செயல்படும்படி கோரினேன். அதை ஏற்று அவர் தற்காலிக அறங்காவலராக செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோவில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கினேன்.

இதற்கு பழிவாங்கும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் கோவில் அறங்காவலர்களுக்கு எதிராக கண்ணன், அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மேலும், தனக்கும், பிற அறங்காவலர்களுக்கும் எதிராக அறநிலையத் துறையில் புகார் அளித்த கண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் சாதகமான உத்தரவு பெற்றதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவிலை முறையாக நிர்வகிக்கவில்லை என கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் அறநிலைய துறை அதிகாரிகள் என்னை விசாரணைக்கு அழைத்தனர். அங்கு சென்று போதுமான விளக்கமளித்த போதும், தன்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலித்தும், கோவில் கணக்கு வழக்குகளை முறையாக கையாளாத  கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Temple Lifetime Trustee Suspend Case

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தது .

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரனான மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், ”இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஆராயாமல், கவனத்தை செலுத்தாமல் இடைநீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று வாதிட்டார்.

இந்து அறநிலைத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், அறங்காவலர்கள் இறந்ததை தெரிவிக்கவில்லை என்றும் நன்கொடை சீட்டுகள் அடித்ததில் அனுமதி பெறவில்லை என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரருக்கு இந்து அறநிலைத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மனுதாரருக்கு எதிராக நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”அயோத்தி ராமர் கோயிலுக்குப் பிறகு என் அடுத்த இலக்கு என்ன?” : மோடியின் முழு உரை!

ராமர் கோயில் திறப்பு விழாவில்… தோனி, ரோஹித், கோலி கலந்து கொள்ளாதது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *