தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவுபடுத்தியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை, மதுரை, தேனி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, “300 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜாக்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்றைக்கு தங்களை தமிழர்கள் என்கிறார்கள். எப்போதோ இங்கு வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? ” என்று பேசியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த சர்ச்சைப் பேச்சு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடாவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பல தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தது.
இதனை தொடர்ந்து நேற்று (நவம்பர் 4) செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, “தெலுங்கு மக்கள் குறித்து நான் இழிவாக பேசியதாக திமுகவைச் சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் இனவாதத்தை பேசவில்லை” என்று விளக்கமளித்திருந்தார்.
இந்தநிலையில், தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரியா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுதிரண்டு கஸ்தூரிக்கு எதிராக புகார் அளித்தனர்.
அந்த புகார் மனுவில், “தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்து தெலுங்கு மன்னர்கள் உருவப்படத்திற்கு முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும்பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலெட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குத்துச்சண்டை வீராங்கனை இமானுக்கு விதைப்பை… கர்ப்பப்பை இல்லை…பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
இன்ஸ்டாவில் ஐஸ்வர்யாராய் பின்தொடரும் ஒரே நபர்… யார் தெரியுமா?