அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை நாள் முழுவதும் ஸ்டேஷனில் வைத்து கொடுமை படுத்தியதாக எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பிடுங்கியதாக அடுக்கக்கடுக்கான புகார்கள் எழுந்தன. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். நெல்லை எஸ்.பி.யாக இருந்த சரவணன் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த சூழலில் பல் பிடுங்கிய புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 10ஆம் தேதி, அம்பாசமுத்திர வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்று பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
புகார் கூறியவர்களை போலீசார் மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழலில் ஈமெயில் வாயிலாகவோ, வாட்ஸ்அப் மெசேஜ் அல்லது போன் மூலமாகவோ வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என்று அமுதா ஐஏஎஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணையை அமுதா ஐஏஎஸ் தொடங்கினார். அன்றைய தினம் 5 பேர் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மறுபக்கம் பல்வீர் சிங் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் இன்று (ஏப்ரல் 19) பல்வீர் சிங் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகல் வெளியாகியுள்ளது.

அதில், “பல்வீர் சிங் பற்களை பிடுங்கியதால் பாதிப்புக்கு உள்ளான சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வீர் சிங் மீது குற்ற எண் 01/2023படி, 323, 324, 326 506/1 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 23ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து சுபாஷ் அளித்த புகாரின் பேரில் ஏப்ரல் 17ஆம் தேதி பகல் 12 மணிக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் திருநெல்வேலி மாவட்டம், தனசேகரன் நகர், விஜய கணபதி பிள்ளையார் கோவிலில் பின்புறம் வசிக்கும் இசக்கியின் மகன்
சுபாஷ் கொடுத்த புகார் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
அதில், “நான் மேற்கண்ட முகவரியில் என் மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தூத்துக்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறேன்.
நானும் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த லட்சுமி சங்கர், வெங்கடேஷ் ஆகியோரும் நண்பர்கள். எங்களுக்கும் தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த இன்னொரு வெங்கடேஷ் வகையறாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டு, கடந்த மார்ச் 22 ஆம் தேதி மதியம் 3 மணி வாக்கில், கல்லிடைக்குறிச்சி தலைச்சேரியில் வைத்து வாய் தகராறு ஏற்பட்டது.
பாப்பான்குளம் வெங்கடேஷ் எங்கள் மீது கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டார். நாங்கள் மூன்று பேரும் பயந்து போய் மேல் கண்ட முகவரியில் உள்ள எங்கள் வீட்டில் அன்று இரவு தூங்கினோம்.
ஸ்டேஷனில் காலை முதல் மாலை வரை என்ன நடந்தது?


கடந்த மார்ச் 23ஆம் தேதி காலை சுமார் 8.15 மணியைப் போல் போலீசார் பசீர், இசக்கி மற்றும் இன்னொருவர் எங்கள் மூவரையும் தனியார் காரில், அதாவது ஐ10 காரில் வந்து எங்களை விசாரித்து விட்டு விடுவதாக சொல்லி கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எங்களை அழைத்துச் செல்லும் போதே கூனியூர் அருகே அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கும் ஒரு பொலிரோ வாகனத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு முன்னால் சென்றார்.
சுமார் பத்து மணி அளவில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் சென்றதும் மாடிப்படி அருகில் வைத்து ஏஎஸ்பி பல்வீர் சிங் எங்களை ஆடைகளை அவிழ்க்க சொல்லிவிட்டு ஜட்டியுடன் நிற்க வைத்தார்.
பின்னர் அவர்களை மேலே கூட்டி வாருங்கள் என்று அவர் சொன்னதும் போலீசார் எங்களை காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏஎஸ்பி பல்வீர் சிங், சிஐடி காவலர் ராஜ்குமார், ரைட்டர் சுடலை, போலீசார் விக்னேஷ், சதாம், பஷீர், இசக்கி மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இன்னொரு காவலர் ஆகியோர் இருந்தனர்.
ஏஎஸ்பி பல்வீர் சிங் காவலர் சதாமிடமிருந்து ஒரு பாக்ஸை வாங்கி அதற்குள் இருந்த ஒரு கட்டிங் பிளேயரை எடுத்து லட்சுமி சங்கரின் மேல் தாடையில் ஒரு பல்லை பிடுங்கினார். அவர் வலியால் அலறியடித்து துடித்தார்.
ரத்தம் வாயிலிருந்து ஆறாகக் கொட்டியது. பின்னர் லத்தியால் ஒரு அடி அடித்தார். ரைட்டர் சுடலை தரையில் சில பேப்பர்களை விரித்து ரத்தம் பேப்பர்களில் சிந்துமாறு பார்த்துக் கொண்டார்.
அடுத்து ஏஎஸ்பி பல்வீர் சிங் என்னை வாயை திறக்கச் சொன்னார். பல்லை பிடுங்கி விடுவார் என்று பயந்து போய் நான் அவரை கிட்டே வரவிடாமல் தடுக்க முற்பட்டபோது சிஐடி ராஜ்குமார், ‘டேய் அவரை தொடக்கூடாது’ என்று அதட்டினார்.
பின்னர் ஏஎஸ்பி பல்வீர் சிங் என் வாய்க்குள் கட்டிங் பிளேயரை விட்டு வலது கீழ் தடையில் ஒரே நேரத்தில் மூன்று பற்களை பிடுங்கி விட்டார். பற்களை பிடுங்கும்போது நரம்பு அறுந்தோ, காய்ச்சல் வந்தோ, ஹார்ட் அட்டாக் ஏற்பட்டோ சாகக்கூடும் என்று நன்றாக தெரிந்திருந்தும், பிரசவ வலியை விட பல்லை பிடுங்கும்போது ஏற்படும் வலி கொடுமையான வலி என்று நன்றாக தெரிந்திருந்தும் கொஞ்சமும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னை கொலை செய்யும் நோக்கத்துடன் மூன்று பற்களை பிடுங்கி விட்டார்.
பிடுங்கப்பட்ட பற்களின் அருகில் உள்ள சில பற்கள் ஆடவும் ஆரம்பித்து விட்டன. வாயிலிருந்து ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ரைட்டர் சுடலையோ சிரித்தவாறு கீழ ரத்தம் படாதவாறு பேப்பர்களை விரித்தார். நான் வலியால் அலறி துடித்தேன். ஏஎஸ்பி பல்வீர் சிங் லத்தியால் ஒரு அடி அடித்தார்.
மூன்றாவதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பற்களை பிடுங்க வெங்கடேஷை அழைத்தபோது வெங்கடேஷ் தன்னை விட்டு விடுமாறு அவர் காலில் விழுந்து கெஞ்சினார். உடனே வெங்கடேசன் காதில் கட்டிங் பிளேயர் அழுத்தி பிடித்தார். பின்னர் வெங்கடேசன் முதுகில் கட்டிங் பிளேயரால் பிடித்து தூக்கினார்.
எனினும் வெங்கடேஷ் வாயை திறக்க மறுத்ததால், எங்களிடம் வந்து அவனை வாயத் தொறக்கச் சொல்லுங்க இல்லனா உங்களுக்கு இன்னும் மூணு பல்ல பிடுங்கி விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அச்சமடைந்த நாங்கள் வெங்கடேஷை வாயை திறக்கச் சொல்லி அழுதோம். அவர் வாயைத் திறந்ததும் கீழ் தாடையில் அவருக்கு மூன்று பற்களை பிடுங்கினார். அவர் அலறி துடித்தார்.
ரத்தம் ஆறாக கொட்டியது. சத்தம் போடாதே என்று ஏஎஸ்பி அவரை லத்தியால் மூன்று அடி அடித்தார். ரைட்டர் சுடலை வழக்கம் போல் கீழே பேப்பர்களை விரித்தார். பின்னர் ஆளாளுக்கு திட்டினர்.

இனிமேல் ஏதாவது குரூப் ஃபார்ம் பண்ணினால் உங்களுக்கு சாவுதான் என்று மிரட்டினர். பின்னர் எங்களை பாத்ரூமிற்கு சென்று எங்கள் வாய், முகம், உடலை கழுவ சொல்லிவிட்டு கீழே சிதறி கிடந்த ரத்தத்தையும் எங்களையே கழுவி விட செய்தனர்.
நாங்களும் கழுவி விட்டோம். காலை 10.45 மணியளவில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி வந்து மாத்திரை கொடுத்தார். கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி கொடுத்து குடிக்க சொன்னார். டிரஸ் எடுத்து கொடுத்து அங்கேயே அமர வைத்தார்கள்.
அதன் பின்னர் சுமார் 4 மணியளவில் எங்கள் மூவரையும் ஆய்வாளர் ராஜகுமாரி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வார்டு எண் 52 இல் உள்நோயாளிகளாக சேர்த்தனர்.
அடுத்தடுத்து நடந்தது என்ன?
அடுத்த நாள் அதாவது மார்ச் 24ஆம் தேதி காலை 7 மணி போல் வேறு ஒரு வார்டுக்கு மாற்றி விட்டனர். அவ்வப்போது ஆய்வாளர் ராஜகுமாரி வந்து பார்த்துக் கொண்டார். பின்னர் எங்களிடம் வந்து நாங்கள் டிஸ்சார்ஜ் ஆகிக்கொள்கிறோம் என்று டாக்டரிடம் நீங்களாகவே சொல்லுங்கள் என்று சொல்ல சொன்னதின் பேரில் நாங்களும் டாக்டரிடம் அப்படியே சொன்னோம். பின்னர் எங்களை டிஸ்சார்ஜ் செய்தார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “டிஸ்சார்ஜ் ஆன பிறகு ஆய்வாளரும் சிறப்பு படை காவலர் ஒருவரும் எங்களை அவர்களது ஜீப்பில் அழைத்துக் கொண்டு கல்லிடைக்குறிச்சி நோக்கி சென்றார்கள். சுமார் 4.30 மணியைப் போல கரம்பை என்ற ஊர் அருகே வைத்து எங்களை காவல்துறை வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு இண்டிகோ காரில் ஏற்றி, டானா-ஆம்பூர் ரோட்டில் சிறிது தூரம் அழைத்து சென்றார்கள்.
அங்கே அரசு வழக்கறிஞர் திருமலைக்குமார் அவரது உதவியாளர்கள் கணேசன் மற்றும் இன்னொரு வக்கீல் இருந்தனர். எனது மனைவி சங்கீதா, வெங்கடேஷ் மனைவி மற்றும் அம்மா, திமுக ஒன்றிய சேர்மன் பரணிசேகர் மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் அவர்கள் காரில் எங்கள் மூவரையும் ஏற்றிக்கொண்டு, நாங்கள் வந்த இண்டிகோ காரில் எங்கள் வீட்டாரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
எங்களை அழைத்துக் கொண்டு போய் பாபநாசம் விஜய் லாட்ஜில் சுமார் மாலை 6.45 போல தங்க வைத்தனர். எங்களுடன் வக்கீல் கணேசனும் இன்னொரு வக்கீலும் தங்கி கொண்டனர்.

பின்னர் 10.30 மணிக்கு மேல் எங்களை பாபநாசம் சேனைத்தலைவர் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து நாங்கள் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தது போல சில ஆவணங்களை தயாரித்து எங்களிடமும் எங்கள் வீட்டாரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
அங்கு போலி ஆவணங்களை தயாரித்தது காவல் ஆய்வாளர் ராஜகுமாரி ஆவார். அவருடன் அரசு வழக்கறிஞர் திருமலை குமார் எஸ்ஐ ஆபிரகாம் ஜோசப் மற்றும் சில போலீசார் இருந்தனர்.
பின்னர் எங்களை மார்ச் 25ஆம் தேதி அதிகாலை 00.30 மணி அளவில் எங்கள் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். பல் பிடுங்கியதை வெளியே சொல்லக்கூடாது என்றும் ஒரு வாரத்திற்கு உள்ளூரில் இருக்கக் கூடாது என்றும் கூப்பிடும் போது மட்டும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் மீறி செயல்பட்டால் குண்டாஸ் போட்டு விடுவோம் என்றும் மிரட்டி அனுப்பினர்.
30000 கொடுத்த போலீஸ்
பின்னர் 25ஆம் தேதி மதியம் சுமார் ஒரு மணி அளவில் மணிமுத்தாறு கேம்ப் போலீஸ் கேன்டீன் அருகில் வைத்து வைத்திய செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வழக்கறிஞர் திருமலைக்குமாரும் ஆய்வாளர் ராஜகுமாரியும், எஸ்.ஐ ஆபிரகாம் ஜோசப்பும் எங்கள் மூவருக்கும் தலா முப்பதாயிரம் கொடுத்தனர்.
அதனை சிஐடி ராஜ்குமார் தன் போனில் வீடியோ எடுத்தார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வெளியில் சொன்னால் உறுதியாக குண்டாஸ் போட்டு விடுவோம் என்றும் விரட்டி அனுப்பினர்.
நானும் ஓரிரு நாட்கள் அவர்களுக்கு பயந்து போய் அமைதியாக இருந்தேன். தற்போது என்னைப் போல பாதிக்கப்பட்ட பலரும் துணிந்து புகார் அளிக்க முன் வருவதால் நானும் துணிந்து புகார் அளிக்க முன்வந்தேன்.
எனக்கு பல்வீர் சிங் பிடுங்கிய மூன்று பற்களை ஒட்டி அதன் காரணமாக ஆடிக் கொண்டிருந்த ஒரு பல்லையும் டாக்டர் பிடுங்கிவிட்டார். மேலும் எனக்கு 14 பற்கள் பிடுங்கி நடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

என்னையும் என் நண்பர்களையும் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்து எங்களை கொலை செய்ய முயன்றதோடு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
தற்போது புகார் அளிக்கக் கூடாது என்று போலீசார் என்னை மிரட்டி வருகிறார்கள். போலீஸாரால் என் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. ஆகையால் என் மீது கருணை கூர்ந்து எங்களை பற்களை பிடுங்கி சித்திரவதை செய்து கொலை செய்ய முற்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கும், இந்த வழக்கு தொடர்பான மற்ற நகல்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பொன்.ரகு விசாரணை மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விரைவில் இவ்வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: கலாமை புறக்கணித்த கவர்னர்… மோடிக்காக ரவி போடும் ராம்நாடு ஸ்கெட்ச்!
இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆளுநர் மரியாதை!