தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் டிட்டோ ஜாக் அமைப்பு, தங்களது 31 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(செப்டம்பர் 10) அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே இருக்கும் ஊதிய முரண்பாட்டைக் களைதல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைத் தடுக்கும் விதமாக அமைந்திருக்கும் அரசாணை 243 ரத்து செய்தல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், போன்ற 31 கோரிக்கைகளை அரசு நடைமுறைபடுத்தும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், செப்டம்பர் 10-ஆம் தேதி, எல்லா மாவட்டங்களிலும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாகவும், செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில், கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டம் நடத்தி வருவதால், அரசுப் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் 300 தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை. மேலும் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் குறைந்த அளவிலான ஆசிரியர்களே பணிக்கு வந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளை அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள் மூடியதால், வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் உள்ள நகராட்சி திடலில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால், வகுப்புகளில் வெறுமனே மாணவர்கள் அமரவைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி டிட்டோ ஜாக் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய தொடக்கக் கல்வித் துறை, டிட்டோ ஜாக் முன்வைத்துள்ள 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் அரசு நடைமுறைப்படுத்தும் என்று கூறியது.
அதாவது, எமிஸ் (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் வருகை, பள்ளிகளில் நடத்தப்படும் பாடம் போன்ற தகவல்களை உள்ளிட 6000 நபர்கள் நியமிக்கப்படுவார்கள், பள்ளி மேலாண்மை குழு சந்திப்புகள் மாதத்திற்கு ஒரு முறை நடத்துவதற்குப் பதிலாகத் தேவைக்கேற்ப நடத்தப்படும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நடத்தப்பட்ட ஆன்லைன்(online) மதிப்பீடுகள் இனி மாதத்திற்கு ஒரு முறை தான் நடத்தப்படும் போன்ற 12 கோரிக்கைகளை அரசு செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவற்றை உறுதி செய்யும் விதமாக எந்த தகவலோ அறிக்கையோ டிட்டோ ஜாக் அமைப்புக்குக் கிடைக்காததால், அவர்கள் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையில் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், போராட்டத்தின் காரணமாக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம் போல் நடக்கவேண்டும்.
மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வலியுறுத்தல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வேகப்பந்து வீச்சாளர் என்பதை மறந்த மனோஜ் பிரபாகர்… அதிரடி மன்னன் கையில் இலங்கை அணி!
தனுஷ் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?