அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று (அக்டோபர் 12) அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்து பராமரிக்கும் தளமாக கல்வி சார் தகவல்கள் மேலாண்மை அமைப்பு (EMIS) அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி கல்வி சாரா மன்ற செயல்பாடுகளின் விவரங்களையும் உரிய நேரத்தில் ஆசிரியர்கள் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதில் 43 வகையான பதிவேற்றங்களை ஆன்லைனில் செய்ய வேண்டிய இருப்பதால் தங்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
அதன் தொடர்ச்சியா பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் – ஆசிரியர் கூட்டுக்குழு அமைப்பின் சார்பில் நாளை(அக்டோபர் 13) போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இன்று தொடக்ககல்வி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்முடிவில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் நாளைய போராட்டத்தை கைவிடுவதாக டிட்டோ ஜாக் -ஆசிரியர் கூட்டுக்குழு அமைப்பின் மாநில உயர்மட்டகுழு உறுப்பினர் சேகர் கூறி உள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”எங்களது முதன்மையான கோரிக்கையான எமிஸ் பதிவை வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பதிவு செய்ய தேவையில்லை என்றும், இதற்கான அரசாணை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி எங்களின் 11 கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து நாளை நடத்த இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை ராஜரத்தினம் மைதானத்தில் விளக்க கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்” என்று சேகர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சேப்பாக்கத்தில் உலகக்கோப்பை போட்டி… மெட்ரோ அறிவித்த ஆஃபர்!
டிஜிட்டல் திண்ணை: பணத்தைப் பிடி… படம் பிடி! திமுகவை நோக்கி தீவிரமாகும் ED வேட்டை!