சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் நடத்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி இன்று (செப்டம்பர் 6) அதிரடியாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் மீதான இந்த இடமாற்ற நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு மேல்நிலை, உயர்நிலை ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“சென்னையில் அசோக் நகர் மகளிர் மேல் நிலைப்பள்ளியின் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்து வந்தவர் தலைமை ஆசிரியர். அப்பள்ளியின் ஆசிரியர்களும் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பள்ளியில் எதிர்பாராத விரும்பத்தகாத நிகழ்வு நடந்துவிட்டது.
மதத்தை பரப்ப வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருப்பவர்கள்… மாணவர்களை மோட்டிவேட் செய்கிறோம் என்று கெஞ்சி கூத்தாடி அனுமதி பெற்று மத கருத்துகளை ஆன்மிக கருத்துகளை போதித்திருக்கிறார்கள். இதை தமிழக அரசும் போலீசும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை ஆசிரியரை ஏமாற்றி அவர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் அப்பாவி. மாணவச் செல்வங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் அனுமதித்திருக்கிறார். அவரது நோக்கம் நல்ல நோக்கம்தான்.
அந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சிபாரிசில்தான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்படி அவர் பேசியபோது பாதியில் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர்கள் ஒருவர் பேசும்போது பாதியில் நிறுத்த மாட்டார்கள்.
இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம். தற்செயலாக நிகழ்ந்துவிட்டது. இட மாறுதல் செய்வதாக இருந்தால் கூட சென்னை மாவட்டத்திலேயே இடமாறுதல் செய்தால் நன்றாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருக்குறளை பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்க போகிறார்களா? : உமா ஆனந்த் கேள்வி!
அன்று நடிகர் தாமு… இன்று மகா விஷ்ணு… மாணவர்களை அழ வைக்கும் மோட்டிவேஷன் ஸ்பீக்கர்ஸ்!