சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை காவல்துறையினர் இன்று (அக்டோபர் 5) கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்படுகிறது.
இந்த வேறுபாட்டை நீக்கி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு வார காலமாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேலும் டிபிஐ வளாகத்தில் மற்றொரு பகுதியில் பணிநிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்புகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல. எனவே, தங்கள் போராட்டத்தை தொடர்வதாக டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி 8வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். போராட்டம் நடத்த 7 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 8வது நாளாக போராட்டத்தை தொடர்ந்ததன் அடிப்படையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ODI World Cup 2023: மூன்றாவது முறையாக சாதிக்குமா இந்தியா?
ஜூனியர் என்டிஆரின் “தேவரா”: பார்ட் 2 அப்டேட் கொடுத்த இயக்குநர்