ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 19ஆம் தேதி காலமானார்.
யார் இவர்?
பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கு அல்ல வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் அது தீட்டு, சாமிகுத்தம் ஆகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்த சமூகத்தில், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்குள்ளும் வரலாம், ஏன் கருவறைக்குள் வந்தும் வழிபடலாம் என ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்தான் இந்த பங்காரு அடிகளார்.
தினசரி மேல்மருவத்தூரை கடப்பவர்களுக்கு தெரியும், ஆதிபராசக்தி கோயிலுக்கு நாளொன்றுக்கு எத்தனாயிரம் பெண்கள் வந்து செல்கிறார்கள் என்று. இதற்கு பங்காரு அடிகளாரின் இந்த முக்கிய முடிவே காரணம்.
ஆன்மீக பயணத்துக்குள் எப்படி வந்தார்?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை கோபால நாயக்கர், இவர் பால் வியாபாரி. தாய் மீனாம்பாள். பங்காருவின் இயற்பெயர் சுப்பிரமணி.
செங்கல்பட்டு அருகே அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து அச்சரப்பாக்கம் பகுதியில் ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
சுப்பிரமணி சிறுவயதில் இருந்த போது அவரது குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில், அவரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீபாராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, “உங்கள் மகன் மூலம், நான் மக்களின் துயரங்களைத் துடைப்பேன்” என்று ஆதிபராசக்தி அம்மன் சொன்னதாகவும் பங்காரு அடிகளார் பற்றிய குறிப்பில் ஆதிபராசக்தி சித்தர் பீட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சிறுவயது முதலே ஆன்மீக நம்பிக்கையோடு வளர்ந்தவர்.
ஒரு நாள் இவர்களது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்த வேப்பமரத்தில் பால் வடிந்ததாக சொல்லப்படுகிறது. இதனை காண அம்மன் பக்தர்கள் அங்கு திரண்டனர்.
இதன்காரணமாக அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்தார். வேப்பமரத்தடியில் இருந்த கல்லுக்கு சுயம்பு அம்மன் என பெயரிட்டவர், தனது பெயரையும் சுப்பிரமணி என்றிருந்ததை பங்காரு அடிகளார் என மாற்றிக்கொண்டார்.
வேப்பிலை மந்திரித்தல் போன்ற பணிகளை செய்யத் தொடங்கினார். ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் முழுநேரத்தையும் ஆன்மீகத்தில் செலவிட்டார்.
1968ஆம் ஆண்டு லட்சுமி என்ற ஆசிரியையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 பிள்ளைகள். அன்பழகன், செந்தில் ஆகிய இரு மகன்களும், உமா, தேவி ஆகிய மகள்களும் பிறந்தனர்.
தொடர்ந்து 1977ஆம் ஆண்டு சித்தர் பீடத்தில் கருவறைக்கான கால்கோள் விழா நடும் பணி நடைபெற்றது. பக்தர்கள் அருள்வாக்கு கேட்பதற்கு குவியத் தொடங்கினர். அதன் காணிக்கையைக் கொண்டு சித்தர் பீடத்துக்கான கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.
இந்த கோயில் இன்று வரை அரசுடைமை இல்லாத தனியார் கோயிலாக செயல்பட்டு வருகிறது.
இதுதவிர பங்காரு அடிகளார் பெயரில் நாடு முழுவதும் வழிபாட்டு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 2,500க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்துக்கு கீழ் உள்ளன.
அமெரிக்கா, சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஆன்மிகப் பணிகளைச் செய்ததன் காரணமாக உலக நாடுகளில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்து செல்வார்கள்.
கோயில் மட்டுமின்றி ஆதிபராசக்தி சித்தர் பீட அறக்கட்டளையின் கீழ் பள்ளிகள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்களுக்காக ஏராளமான கட்டிடங்கள் கட்டியதால் உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியவர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமியர்களையும் கவர்ந்த பங்காரு
முன்னதாக, 1980களில் சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்ட பங்காரு அடிகளார் தனக்கு இஸ்லாம் முறையும் பிடிக்கும் என்று சொல்லி தொழுகை செய்து காட்டியிருக்கிறார். அப்போது முதல் அவருக்கு இஸ்லாமிய நண்பர்களும் அதிகம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதுபோன்று ஆன்மீகத்தை நம்பும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி கடவுள் மறுப்பை பின்பற்றும் திராவிட கட்சிகளின் தலைவர்களையும் ஈர்த்தவர்.
ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர். என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பங்காரு அடிகளாரை சந்தித்திருக்கின்றனர்.
கடந்த 2021ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி பங்காரு அடிகளாரைச் சந்தித்தார்.
தற்போதைய திமுக அரசின் முக்கிய திட்டமாக சொல்லப்படும் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தான் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பங்காரு அடிகளாரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது அப்போது பேசுபொருளானது.
பங்காரு அடிகளாரும் சர்ச்சைகளும்
எந்த அளவுக்கு பங்காரு அடிகளார் செல்வாக்கோடு இருந்தாரோ அதே அளவுக்கு அவரை சுற்றி சர்ச்சைகளும் இருந்தன.
இவரது கல்வி நிறுவனங்களில் அதிக அளவு சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு இவருக்கு தொடர்புடையை இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
ஆதிபராசக்தி சித்தர்பீட அறக்கட்டளை கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆதிபராசக்தி அறக்கட்டளை அந்த பகுதி நீர்நிலைகளையும் அரசுக்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதுபோன்று நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்கள் கட்டியதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுபோன்று பல்வேறு சர்ச்சைகளும் பங்காரு அடிகளார் மீது உள்ளன.
அடுத்தது கோயிலை கவனிப்பது யார்?
பங்காரு அடிகளார் மறைவெய்தியது குறித்து மேல்மருவத்தூர் பகுதி மக்களிடம் நாம் பேசியபோது, “எளிமையான மனிதர். தனக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் அன்பாக உரிமையுடன் பழகக்கூடியவர்.
இவரது ஆன்மீக பயணத்தை பாராட்டி 2019ல் மோடி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மேல்மருவத்தூர் என்றால் மருத்துவ ஊர் என்பார். கடந்த 4 மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையிலும், வீட்டில் இருந்தவாறும் சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில், ‘நான் இறந்தாலும் இந்த பகுதிக்கு வளர்ச்சியை கொண்டு வருவேன்’ என கூறினார்.
அவர் வயது மூப்பாலும், உடல் நிலை சரியில்லாததாலும் ஏற்கனவே பொறுப்புகளை மகன்களிடமும், மருமகனிடமும் ஒப்படைத்தார். அதன்படி கல்வி பணிகளை அவரது மகன் அன்பழகன் கவனித்து வருகிறார். கோயில் பணிகளை மற்றொரு மகன் செந்தில் கவனித்து வருகிறார். மருத்துவ கல்லூரி பணிகளை மகள் உமாவின் கணவர் கவனித்து வருகிறார். இனி அடுத்த ‘அம்மா’ அவரது மகன் செந்தில் எனவும் சொல்லப்படுகிறது.
பங்காரு அடிகளாரின் உடல் ஆதிபராசக்தி கோயிலுக்கும் பழைய மருத்துவமனைக்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் பெரிய ஞானபீடத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது” என்கிறார்கள்.
பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர். பங்காருவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா, வேந்தன்
ODI World Cup 2023: 4 போட்டிகளில் 4 வெற்றி.. அசத்தும் இந்தியா!
வரிசை கட்டும் பண்டிகைகள்: அதிகரிக்கும் விமானக் கட்டணங்கள்!