ஆசிரியர்களுக்கு இரண்டு நாளில் முடிவை அறிவித்தால் உடனடியாக போராட்டத்தை கைவிடுவோம். இல்லையேல் போராட்டம் தொடரும்” என்று இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் அறிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம், போட்டி தேர்வுக்கு மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ) மூன்று ஆசிரியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்டோபர் 2) நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
குழு அமைக்கப்பட்டும் தீர்வு இல்லை!
இதனையடுத்து இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், “கடந்த ஆட்சிக்காலங்களில் போராட்டம் நடத்திபோது நேரில் வந்து ஆதரவளித்ததோடு, எங்களது கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் கூட சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று பல இடங்களில் வாக்குறுதியாகவும் அவர் அறிவித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தும் கடந்த 30 மாதங்களாகியும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினோம்.
அப்போது ஊதிய நிர்ணயம் தொடர்பாக 3 பேர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். மேலும் அடுத்த 3 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி!
ஆனால் அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தற்போது மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
இதுவரை தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் ஆகியோருடன் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை.
தொடந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் இன்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
போராட்டம் தொடருமா?
அப்போது கடந்த 14 ஆண்டுகாலமாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதனை தற்போது போராடி வரும் 20 ஆயிரம் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு இன்றிலிருந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அதற்கு அமைச்சர், ”எங்களது கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்த இரண்டு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இத்தனை நாட்கள் போராட்ட களத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
அப்படி நடந்தால் உடனடியாக நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இல்லையேல் பணி செல்ல மறுத்து எங்களது போராட்டத்தை தொடர்வோம்” என்று ராபர்ட் அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெலுங்கில் ’மார்ட்டின் லூதர் கிங்’ ஆக மாறிய ’மண்டேலா’!
நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு : டெல்லியில் நடப்பது என்ன?