டீக்கடைக்காரரின் மகள் இப்போது டிஎஸ்பி.. யார் இந்த பவானியா?

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி, வேலை வாய்ப்பில் பெண்களின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்து வருகிறது. பெண்களுக்கு கல்வி என்பது எட்டா கனியாக இருந்த காலம் பின் சென்று, இப்போது வயக்காடு முதல் வான்வெளி வரை பணி சார்ந்த துறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் பெண்களே கோலோச்சி வருகின்றனர்.

இந்தாண்டு நடந்த 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில் தொடங்கி தற்போது குரூப்1 பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வு வரையிலும் பெண்களே அதிக இடங்களை பெற்று முத்திரை பதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக குரூப்1 தேர்வில் வெற்றி பெற்று துணை கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி பெண் கல்வியின் முக்கியத்துவத்திற்கு சான்றாகி உள்ளார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டீக்கடைகாரரின் மகள் பவானியா.

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து. டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மொத்தம் 4 பெண் குழந்தைகள். அதில் 3ஆவதாக பிறந்தவர் தான் பவானியா. குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக அரசு பள்ளியிலேயே பயின்றுள்ளார்.

கல்லூரி படிப்பையும் அரசுக் கலை கல்லூரியில் தமிழ்வழிக் கல்வியிலேயே பயின்றுள்ளார். பின்னர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த பவானியா, கடந்த ஜனவரி மாதம் நடந்த துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.

டீக்கடைக்காரர் மகள் டூ டிஎஸ்பி!

அதனைத் தொடர்ந்து மே மாதம் நடைபெற்ற மெயின் தேர்விலும் வெற்றி பெற்ற பவானியா, நேர்முக தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். அதன் முடிவுகள் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 66 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இறுதிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதில் குரூப் 1 தேர்வு எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் பவானியா. அவர் காவல் துறை கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் டீக்கடைகாரரின் மகளாக பிறந்த பவானியா இன்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ள நிலையில் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வாழ்த்து!

முன்னாள் அதிமுக அமைச்சரும், புதுக்கோட்டையைச் சேர்ந்தவருமான சி.விஜயபாஸ்கர், பவானியா குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வானமே எல்லை… வாழ்த்துகள் பவானியா DSP! என்று பதிவிட்டுள்ள அவர்,”டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, பவானியா காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்குத் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இலட்சக்கணக்கானவர்கள் எழுதும் குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே அவர் இந்த வெற்றியைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. குக்கிராமத்தில் பிறந்து டி.எஸ்.பி-யாக உயர்ந்து நிற்கும் பவானியா, வாழ்வில் மென்மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் பெண்கள் முன்னேற்றம்!

சிலரின் வெற்றிகள் நம்மையும் அறியாமல் மகிழ்ச்சியை கொடுக்கும். அதிலும் தன்னை சுற்றி இறுக பிடித்திருக்கும் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சாதனை படைப்பவர்களின் வெற்றி மகிழ்ச்சியோடு மனதில் எழுச்சியை கொடுக்கும்.

அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது தான் குக்கிராமத்தில் டீக்கடைக்காரரின் மகளாக பிறந்து டின்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ள பவானியாவின் வெற்றி. அவரின் இந்த நம்பிக்கை தரும் வெற்றி, வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் பல பெண்களின் முன்னேற்றத்திற்கு ஒளியாக இருக்கும்!

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் பணி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts