நிதி பகிர்வில் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிப்பதாக புள்ளி விவரங்களுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 11) மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
“தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நிதியாண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முறையே 10.6% மற்றும் 13.78% வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “30.6.2022 முதல் சரக்கு மற்றும் சேவை வரி முடிவுற்றதன் விளைவாக தமிழ்நாடு அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
2022 ஆகஸ்ட் மாதம் வரையில், ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,603 கோடி மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றிருக்கக் கூடிய நிலையில், இந்த ஆண்டில் தற்போது வரை 3,503 கோடி ரூபாய் மட்டும்தான் பெற்றிருக்கிறோம்.
இதன் விளைவாக மத்திய அரசின் உதவி மானியங்கள், 36.59% அளவு குறைந்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மேலும் 1,000 கோடி ரூபாய் பெறப்படும் என எதிர்பர்க்கப்படும் நிலையில், 2022-23ம் நிதியாண்டு தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை அளித்த பிறகு இறுதித் தொகைக்கான தீர்வு எய்தப்பட்டுவிடும் என்று நம்புகிறோம்.
இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு ஏதுவாக அந்த முதல் காலாண்டுக்குள் தனியாகவே ஒரு தணிக்கை முறை ஏற்படுத்தி தர வேண்டும் என டெல்லியில் மத்திய நிதியமைச்சரை சந்தித்த போது கோரிக்கை வைத்தேன்.
மத்திய அரசின் நேரடி வரி விதிப்பில் மாநிலங்களின் பங்களிப்பில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. ஆனால், அந்த பங்களிப்புக்கு நிகரான பகிர்வினை பெறவில்லை.
தமிழகத்தில் இருந்து செலுத்தக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஈடாக 29 பைசா மட்டுமே நமக்கு கிடைக்கிறது. மாறாக, பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், ஒரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் கிடைக்கிறது.
2014-15 முதல் 2021-22 வரை மத்திய அரசின் நேரடி வரியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால், வரி பகிர்வாக இந்த காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு கிடைத்தது 2.08 லட்சம் கோடி மட்டும்தான்.
இதே காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு வரி பகிர்வாக கிடைத்திருப்பது ரூ.9.04 லட்சம் கோடி. உத்தரப்பிரதேசம் செலுத்திய வரியைவிட, வரி பகிர்வு 4 மடங்கு அதிகமாக அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
2023-24ல் மாநிலங்களுக்கு என்று இருக்கக்கூடிய பாதுகாக்கப்பட்ட வருவாயில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பு என்பது ரூ.20,000 கோடி ஆகும்.
இந்த காரணங்களை சொல்லி, இன்னும் 2 ஆண்டுகள் இழப்பீட்டை நீட்டித்து வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் மத்திய அரசு இழப்பீட்டுக் காலத்தை நீட்டித்து தரவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு 1.5 லட்சம் தான் தருகிறது. தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் வரை கொடுக்கிறது. ஆனால் பெயர் மட்டும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார்.
அன்று பிடிஆர்… இன்று தங்கம் தென்னரசு…
நிதியமைச்சரின் இந்த குற்றசாட்டுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதில், “தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ந்து பொய் கூறி வந்தார் அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அதே பாணியில், தற்போது சட்டசபையில் பொய் கூறிக் கொண்டிருக்கிறார் தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அவருக்கு உண்மையை எடுத்துக் கூறுவது நமது கடமை.
2014 முதல் 2022 வரை, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில், தமிழகத்தின் பங்கு ரூபாய் 5.16 லட்சம் கோடி என்றும், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு ரூபாய் 2.08 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு 2.46 லட்சம் கோடி ஆகும்.
அதனுடன், கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய உதவித் தொகை, 2.30 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து கிடைத்ததாக அமைச்சர் கூறும் 5.16 லட்சம் கோடி வரி வருவாயில், நேரடி நிதியாகவே கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி 4.77 லட்சம் கோடி ஆகும். அமைச்சர் கூறும் 2.08 லட்சம் கோடி ரூபாய் கணக்கை எப்படிக் கணக்கிட்டார் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
2004 – 2014 பத்தாண்டு கால காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு மற்றும் உதவித் தொகை, வெறும் 1.5 லட்சம் கோடிதான் என்பதை, தமிழக நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசுவுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக, பிரதமர் தமிழகத்துக்கு நேரடி நிதியாக வழங்கியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தமிழக உட்கட்டமைப்பு மேம்பாடுக்காகவும், மாநில அரசின் தலையீடு இல்லாமல், மத்திய அரசு நேரடியாக வழங்கும் நலத் திட்டங்கள், மானிய விலையில் ரேஷன் அரிசி என கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூபாய் 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இது, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் வரிப் பங்கீடு, மற்றும் திட்டங்களின் மதிப்பு, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் பாரம்பரியமான, மீண்டும் மீண்டும் பொய் கூறினால் உண்மை என்று மக்கள் நம்பி விடுவார்கள் என்பது இனியும் செல்லுபடியாகாது.
கூரையின் மீதேறி சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை என்பதை மக்கள் உணர்வார்கள் அதை நிதி அமைச்சரும் உணர்வார் என்று நம்புகின்றேன்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ICC worldcup: வாரி வழங்கிய சிராஜ்… அதிகபட்ச ஸ்கோர் குவித்த ஆப்கானிஸ்தான்!