தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இன்று (மார்ச் 13) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் சென்னை தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இதில் ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி இறுதியில் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில் டாடா குழுமம் தமிழ்நாட்டில் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.
வாகன உற்பத்தித் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே. விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநர் கி.செந்தில் ராஜ் மற்றும் டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?
“மக்களவை சீட் வழங்கவில்லை என்றால்…” : ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா முக்கிய கோரிக்கை!