கிச்சன் கீர்த்தனா: பொங்கல் வைக்கப் போறீங்களா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!
போகிக்கு நிறைய பேர் வீட்டில் போளி செய்வார்கள். ஒரு மாறுதலுக்கு கடலைப் பருப்புக்குப் பதில், வறுத்து வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்துச் செய்யலாம்.
பொங்கல் அன்று வைக்கும் காய்க் குழம்பில் உப்பு, காரம், புளிப்பு சற்று தூக்கலாக சேர்த்தால், வெண் பொங்கலுக்கு சரியான சைடிஷாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கலை இறக்கியதும் கண்டென்ஸ்டு மில்க் ஊற்றினால் சுவை மேலும் அள்ளும்.
தேங்காயைப் பல்லு பல்லாகக் கீறி, நெய்யில் வறுத்து, சர்க்கரைப் பொங்கலில் சேருங்கள். அது கடிபடுவது தனி ருசியைத் தரும்.
சர்க்கரைப் பொங்கல் வீணாவதைத் தடுக்க, பொங்கல் நன்கு குழைந்தபின், கொஞ்சம் வெண்பொங்கலாக எடுத்து வைத்துவிட்டு, வெல்லத்தைப் போடலாம். எடுத்துவைத்த பொங்கலைப் பிறகு உபயோகிக்கலாம்.
சர்க்கரைப் பொங்கல் வேகும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றினால் கமகம மணமாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
வெண்பொங்கலில் மிளகு, சீரகம் போடுவோம். சீரகம், பச்சை மிளகாயை அரைத்துப் போட்டுச் செய்தால் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
தேங்காய்ப் பால் ஊற்றி பொங்கல் செய்தால், அதிக சுவையுடன் இருக்கும். தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்து நுரைத்து வரும்போதே, அரிசி, பருப்பைக் களைந்து போட்டுவிட வேண்டும். கொதித்த பிறகு போட்டால், நீர்த்துப் போய் சுவையே மாறிவிடும்.
படையலுக்கு வடைக்கு அரைக்கும்போது மாவு நீர்த்துவிட்டால், சிறிதளவு அவல் சேர்த்து அரைத்து வடை தட்டினால் நன்றாக வரும்.
பொங்கல் அன்று பாயசம் செய்யும்போது உலர்ந்த திராட்சைகளைச் சேர்ப்பதற்குப் பதிலாக பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாகச் சேர்த்தால் தனிச்சுவையைத் தரும்.