உலக மக்கள் பலரால் விரும்பப்படும் உணவு வகை டிக்கா. பெரும்பாலும் அசைவ உணவுகளே டிக்காவில் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சைவ உணவுகளும், பழ வகைகளும் இடம்பெறுகின்றன. விதம்விதமான டிக்காக்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றே இந்த இட்லி டிக்கா. இட்லியை வேண்டாம் என்று வெறுப்பவர்களும் இதை விரும்பி சுவைப்பார்கள். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு இது.
என்ன தேவை?
சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லி – ஒரு கப்
சிவப்பு, மஞ்சள், பச்சை நிற குடமிளகாய் – தலா ஒன்று (கியூப் வடிவில் நறுக்கவும்)
ப்ராசஸ்டு சீஸ் – 200 கிராம் (கியூப் வடிவத்தில் நறுக்கவும்)
இட்லி மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
டூத்பிக் – தேவையான அளவு
சோள மாவு – 1 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பவுலில் இட்லித் துண்டுகளைச் சேர்த்து அதன் மேல் சோள மாவைத் தூவிக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடியை எல்லா பக்கமும் படுவது போல தூவவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக கிளறி வைக்கவும். இனி டூத்பிக்கில் இட்லி, குடமிளகாய் துண்டுகள், சீஸ் என ஒன்றன் பின் ஒன்றாகச் செருகிப் பரிமாறவும்.