குளிர்காலத்தில் ருசிக்கவென சில ஐட்டங்கள் உண்டு. அவை எல்லா நாட்களிலும் சாப்பிடக்கூடிய உணவுகள்தான் என்றாலும், அடிக்கிற குளிருக்கு ஆவி பறக்க இந்த உணவுகளைச் சாப்பிடும்போது கூடுதல் சுவையை நிச்சயம் உணர முடியும். அப்படிப்பட்டதுதான் இந்த டேஸ்ட்டி பிரெட் டிரையாங்கிள்ஸ்.
என்ன தேவை?
பிரெட் துண்டுகள் – 4
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
துருவிய கேரட் – 1
ஓமப்பொடி – 200 கிராம்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
புதினா சட்னி செய்ய…
புதினா – ஒரு கட்டு
எலுமிச்சை – 1 (சாறு எடுக்கவும்)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
பச்சை மிளகாய் – 3
தண்ணீர் – தேவையான அளவு
ஸ்வீட் சட்னி செய்ய…
பேரீச்சம்பழம் – ஒரு கப் (விதை நீக்கியது)
கறுப்பு உப்பு – 2 டீஸ்பூன்
வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்
புளி – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் புதினா சட்னிக்கு கொடுத்த புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையைச் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி அரைக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், வறுத்த வேர்க்கடலை, தண்ணீர் சேர்த்து சட்னியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்வீட் சட்னிக்குக் கொடுத்த புளி மற்றும் பேரீச்சம்பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஒன்றாக பத்து நிமிடம் ஊறவைக்கவும். ஊறவைத்த புளி, பேரீச்சம்பழம், வெல்லம், கறுப்பு உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்க்கவும். இத்துடன் புளியை ஊற வைத்த தண்ணீரைச் சேர்த்து மையாக அரைத்து எடுக்கவும்.
கடலை மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்துக்கு, கரைத்து வைத்துக்கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, விரும்பிய வடிவில் நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும், பிரெட் ஸ்லைஸ்களை பஜ்ஜி மாவில் தோந்த்து எடுத்து இருபுறமும் சுட்டெடுக்கவும்.
இதை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் புதினா சட்னி தடவவும். வெங்காயம், கேரட், ஓமப்பொடி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து, அதன் மேல் ஸ்வீட் சட்னி ஊற்றிப் பரிமாறவும்.