கொரோனா காலத்துக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதும் 5,200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவியாளர் ஆகிய நிலைகளில் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு அரசு ஆண்டுதோறும் தீபாவளி போனஸாக 20 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.16,400 என அறிவித்து வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று பரவியதால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தீபாவளி போனஸை பாதியாக, அதாவது ரூ.8,200 ஆக அரசு குறைத்தது.
தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைகளில் விற்பனை சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.
எனவே ஊதியத்தில் 20 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.16,400 போனஸாக வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்களில் முக்கியமான 55 கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட 19 சங்கங்களுடன் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் 39 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. எஞ்சிய கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
இதற்கிடையே, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு டாஸ்மாக் சங்கங்கள் அண்மையில் அனுப்பிய கோரிக்கை மனுவில்,
‘‘டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா காலத்துக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் பொதுநலச் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி,
‘‘நாங்கள் முன்வைத்த 55 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு தந்துள்ளது.
அதேபோல கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றார்.
டாஸ்மாக் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 15,000 கோடியாக இருந்த வருமானம், அப்படியே இரு மடங்காகி 30,000 கோடியாக மாறியது.
தற்போது அந்த வருமானம் 45,000 கோடி என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் ஆண்டில் 50,000 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படிக் கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் மூலமான வருவாய் படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் ஃப்ரை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!