தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பதை தடுக்கும் வகையில், வரும் மார்ச் மாதம் முதல் கியூஆர் கோடு முறையில் விற்பனை நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பிலும், இடையீட்டு மனுதாரர் தரப்பிலும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவிட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ‘மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க புதிய முறை கடைப்பிடிக்கப்படும். மதுபான விற்பனை டிஜிட்டல் மயமாக்கப்படும். கூடுதல் விலை விற்பனையைத் தடுக்க மார்ச் மாதம் முதல் கியூஆர் கோட் முறை அமல்படுத்தப்படும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து அந்தச் சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம், “டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் வழக்கை முடித்து வைத்துள்ளது.