மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

Published On:

| By Guru Krishna Hari

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கை வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ஒரு டன்னுக்கு ரூ.1,000 உயர்ந்து 13,000 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் 17,000 ரூபாய்க்கு விலை போனது. தற்போது 18,000 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share