முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சர் சா.மு. நாசர் கூறியுள்ளார்.
அரியவகை முகச்சிதைவு
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி டானியாவிற்கு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தண்டலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.
அறுவை சிகிச்சை செய்யச் சிறுமியின் பெற்றோரிடம் போதிய பணம் இல்லை என்றும் அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் டானியாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் சிறுமியை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
மருத்துவ குழுவினர் சிறுமியை அதிக கவனத்துடன் பார்த்துக் கொண்டனர். சிறுமியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தனர்.
டானியாவின் படிப்பு செலவை அரசு ஏற்கும்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலிருந்து வந்த டானியா இன்று (செப்டம்பர் 12) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியைப் பார்த்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறுகையில், “முதலமைச்சர் எனக்கு ஃபோன் செய்து சிறுமி நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார். அதனால் நாளை காலை நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார்.
அவரின் உத்தரவின்படி நாங்கள் இங்கு வந்தோம். சிறுமியின் முகம் 80 சதவீதம் சரியாகிவிட்டது.
அறுவை சிகிச்சையால் சிறுமியின் முகத்தில் ஏற்பட்ட காயம் சரியானவுடன் மீதமுள்ள 20 சதவீதம் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டானியா முதல்வருடைய குழந்தை. முதல்வர் சிறுமியைத் தினமும் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
டானியாவின் கல்வி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். டானியாவின் குடும்பத்திற்கு இலவச வீடு வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது.
சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு 15 லட்சம் செலவானது. அதனையும் அரசே ஏற்கும். மேலும் நாட்டிலேயே 9 வயது சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறையாகும்” என்று கூறினார்.
டானியா கூறியது
“இந்த முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேட்டவுடன் இதற்கு ஏற்பாடு செய்து தந்த முதலமைச்சருக்கு நன்றி.
என் முகம் சரியாகிவிட்டது. நான் வீட்டிற்குச் செல்லப் போகிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
தினமும் அமைச்சர் நாசர் என்னை வந்து பார்த்து நலம் விசாரித்தது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. நான் இனி சந்தோஷமாக ஸ்கூல் போவேன்” என்று கூறினார்.
மோனிஷா
பரமக்குடியில் ரயில் மேல் ஏறிய இளைஞர்: மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்!