மின் கட்டணம் செலுத்தவில்லை என்று குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் பல்வேறு விதமான ஆன்லைன் மோசடிகளும் நடைபெற்று வருகிறது. வங்கியில் இருந்து பேசுவதாக மோசடி, புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டுவது, ஆன்லைன் கடன் செயலியில் லோன் வாங்கியிருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் குறுஞ்செய்தி மூலமாகவும் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நமது செல்போனுக்கு குறுஞ்செய்தியுடன் ஒரு லிங்கை அனுப்பி அதனை க்ளிக் செய்தால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை பறிக்கும் மோசடி தான் அது. இது போன்ற குறுஞ்செய்திகளில் வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்று வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும், லிங்கை க்ளிக் செய்து உடனடியாக மின் கட்டணத்தை செலுத்தவும், இல்லையென்றால் வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி பலரது செல்போனுக்கு அனுப்பப்பட்டு மோசடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்த குறுஞ்செய்தி மோசடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து அதன் எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனம்.
1. பதட்டம் அடைய வேண்டாம்
2. உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும்
3. அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்
4. இணைய லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம்
5. உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும்
6. உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும்
இது ஒரு மோசடி மெசேஜ்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, “1. குறுஞ்செய்தி வந்த எண்ணை சரிபார்க்கவும். நம்பகமற்ற எண்ணாக இருந்தால் அதனைப் புறக்கணிக்கவும்.
2. செய்தியில் எழுத்து பிழைகள் இருக்கும்.
3. சைபர் பாதுகாப்பு இலச்சினையான https:// மற்றும் பூட்டு இல்லாமல் இருக்கும்.
4. தொடர்பு கொள்பவர் வேற்றுமொழி உச்சரிப்புடன் பேசுவர்.
5. சிறிய தொகையான ₹10 மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறுவர்.
6. உடனே எச்சரிக்கையாகி புகார் அளிக்கப்படும் எனக் கூறி இணைப்பை துண்டிக்கவும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசடி குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி 1930-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் https://cybercrime.gov.in என்ற இணையத்தளம் வாயிலாகவும் @tncybercrimeoff என்ற சமூக ஊடகம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
8-வது முறையாக மெஸ்ஸிக்கு விருது: விமர்சிக்கும் ரசிகர்கள்!
பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிய கங்கனாவின் ‘தேஜஸ்’!