மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 23 காளைகளை அடக்கிய தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக முதல்வரின் சார்பில் கார் வழங்கப்பட்டது.
பொங்கல் தினத்தையொட்டி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் 28 காளைகளைப் பிடித்து ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்ற மாடுபிடிவீரர் முதல் பரிசான ரூ.7 லட்சம் மதிப்புள்ள முதல்வரின் காரினை தட்டிச் சென்றார்.
அதனைதொடர்ந்து மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான இன்று (ஜனவரி 16) காலையில் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 8 சுற்றுகள் நடந்த போட்டியில் மொத்தம் 860 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
ஒவ்வொரு சுற்றுகளாக மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளிலும் களமிறங்க அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் காளையர்களின் கைகளுக்குள் அடங்க மறுத்து திமிலை சிலுப்பியபடி பிடிபடாமல் பாய்ந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் வழங்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து பாலமேட்டை சேர்ந்த 19 காளைகள் பிடித்த மணி என்பவர் இரண்டாவது இடத்தையும், 15 காளைகளைப் பிடித்த ராஜா என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக ரெங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் காளை கருப்பன் முதல் பரிசினை தட்டிச் சென்றது. 2வது பரிசினை திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது.
கிறிஸ்டோபர் ஜெமா
பாலமேடு ஜல்லிக்கட்டு : 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு!
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் : குருமூர்த்தி வெளியிட்ட பகீர் தகவல்