சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 29ம் தேதி முதலே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது.
மிக கனமழை பெய்யும்!
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
திருச்சிராப்பள்ளி, நாமக்கல் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை!
அதுபோலவே இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டிலேயே இருங்கள்!
அதில், “அடர்த்தியான மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் மழையின் தீவிரம் அதிகரிக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் மாற்று இருக்க வாய்ப்பே இல்லை. மிக கனமழை முதல் தீவிர கனமழை வரை இங்கே பெய்யும்.
இதனால், தயவுசெய்து வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். மழையை மிகவும் பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.” என்று கூறியுள்ளார்.
200 மி.மீ மழைக்கு வாய்ப்பு!
அதேபோல் தனது மற்றொரு பதிவில், ”வடசென்னை மற்றும் வடமேற்கு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே 100 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழை இன்னும் அதிகரிக்கும்.
இதனால் சென்னையில் மழை அளவு பல இடங்களில் இரட்டை சதம் (200 மிமீ வரை) அடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் சென்னைக்கும் மழை இருக்கு!
மேலும், ”வங்காள கடலின் மீது மேகக்கூட்டங்கள் உருவாகி நகருக்கு வரும். நீண்ட தூரத்தில் கடலில் இன்னும் ஒரு மேகக்கூட்டம் உள்ளது.
தெற்கே டெல்டா, காரைக்கால், நாகை போன்ற இடங்களிலும், ராமேஸ்வரத்திலும் கன மழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை காட்டிலும் வசூலை குவித்த காந்தாரா
இன்ஸ்டாகிராம் முடங்கியது ஏன்? காரணத்தை வெளியிட்டது மெட்டா!!