ஸ்ரீராம் சர்மா
பஞ்ச பூதங்களின் உள்ளடக்கம்தான் இந்த எண்சாண் உடலும் பரந்த உலகும் என்கிறார்கள் தமிழ் ஞான சித்தர்கள்.
அந்த பஞ்ச பூதங்களில் பெரும்பான்மையாக நின்று கோலோச்சுவது நீர் தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆம், உலகப் பந்தில் 71 சதவிகிதம் நீர்தான். மனித உடலுக்குள் 60 சதவிகிதமாக நிறைந்திருப்பதும் நீர் தான்.
அதனால்தான் ‘நீரின்று அமையாது உலகம்’ என ஓதிச் சொன்னார் ஈராயிரத்தில் தோன்றிய திருவள்ளுவப் பேராசான்.
அப்படியாகத்தான் குடகு மலை தோன்றி – ஏறத்தாழ 4400 அடி உயரத்திலிருந்து மங்கலமாய் தாவி – புண்ணியத் திராவிடத் திருமண்ணின் மேல் ‘ஆஹெம்’ என மோதி வீழ்ந்து – கேரளம் கடந்து – தமிழ் மண்ணில் புகுந்து – கொங்கு மண்ணையும், சோழ மண்ணையும் ஓடோடி உய்வித்தபடி…
உப்புக் கடலுக்குத் தன்னை ஒப்புவிக்கும் ஆகப் பெரும் ஆதித் தியாகியாக வங்கக் கடலில் சென்று சங்கமிக்கிறாள் நம் காவேரித் தாய் !
அதனால்தான், திராவிடத் தமிழ் மாந்தரெலாம் ஆடி பதினெட்டில் குடும்பமாய் கூடி… ‘தாயே, தயாபரியே…எம் குலத்தாயே ’ என மண்டியிட்டு அவளை நன்றியோடு இன்றளவும் கொண்டாடித் தொழுதெழுகின்றார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலப்பதிகார காப்பியமும் கூட,
மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயற் கண் விழித் தொல்கி
நடந்தாய் வாழி காவேரி!
எனப் போன்றிப் புளகாங்கிதம் அடைகின்றது !
அப்படியாகப்பட்ட நன்னீரை நாட்டை ஆளுமோர் அரசன் நல்லபடியாக பாதுகாத்து மக்களுக்கு அளித்தாக வேண்டிய அவசியத்தையும் அதன் காரணத்தையும் உளமாற அறிவுறுத்துத்திப் போனார் அன்றந்த புறநானூற்றுப் புலவர் குடபுலவியனார்,
வான் உட்கும் வடி நீண்மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே !
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள் ! இனி மிகுதி ஆள ;
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !
மேற்கண்ட செய்யுளின் விளக்கமாவது :
“எதிரிகள் அண்ட முடியாதபடிக்கு வானளாவிய நெடிய மதிலை உடைய எம் வேந்தனே, நீ நல்லதொரு புகழை அடைய விரும்பினாலும் – அதன் வழியே சுவர்க்கம் அடைந்துவிட விரும்பினாலும், அதற்கானகொரு நல்ல வழியை நான் சொல்வேன் கேளாய்…உன் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தையும் – நீர் நிலையையும் நன்கு பேணுவாயாக. நீரும் நிலமும் சேர்ந்தால்தான் உணவு. அந்த உணவை கொடுத்தவரே இங்கே உயிரைக் கொடுத்தவர் ஆவார் !”
ஆம், நீர் இல்லையேல் இங்கு உணவில்லை. உயிரில்லை. அந்த நீரை சிதைப்பவர்கள் பாருக்கே துரோகியாவார்கள். அப்படிப்பட்ட துரோகிகளை முட்டி முடக்குவதே வேந்தனுக்கு அழகு என்கிறது முன்னோர் வாக்கு.
மேற்கண்ட புறநானூற்று வரிகள் யார் குறித்தன எனில், முற்று முதலாக நம் முதலமைச்சரை குறித்தன என்பேன்.
காரணம் உண்டு.
கடந்த நாட்களில், குடிநீர் தொட்டிகளை குறிவைத்தபடி தொடர்ந்து எழுந்து வரும் செய்திகள் ஆட்சியையும் அறிவுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வைத்திருக்கின்றன.
வேங்கைவயல் மலமும் – கடலூர் இளைஞரின் பிணமும் – சிவகாசியில் வீசி எறியப்பட்ட நாயின் உடலமும் நாகரீகத் தமிழ் சமூகத்துக்கு கொஞ்சமும் ஒவ்வாததாகி மனம் சுளிக்க செய்துவிட்டது.
இதுபோன்ற செய்கைகள் தொடர்வது அவலமானது. அதீதமானது. அந்தக் குற்றங்களின் மூலம் எதுவெனக் கண்டு அதனை முளையிலேயே கிள்ளி அழித்துவிடுவது அவசியமாகிறது.
இதுபோன்ற குற்றச் செய்கைகளை மென்கரத்தோடு அணுகுவது நல்லதல்லவென உரசி எச்சரிப்பது அரச கடமையாகிறது.
உலகப் போர் வரலாற்றில், எதிரிகளை அழித்தொழிக்க நீரில் விஷம் கலப்பதையே முதன்மையாக கையாள்வார்களாம். பெரும் பேர் கொண்ட அலெக்ஸாண்டரையும் கூட அவரது எதிரிகள் ஆற்றில் விஷம் கலந்தே கொன்றதாக சொல்கின்றன மேற்கத்தியர்கள் எழுதிய சில பக்கங்கள்.
அப்படியானதொரு கொச்சைத் தாக்குதலை நியாய தர்மத்துக்குப் பேர் போன தமிழ்நாட்டில் – தங்கள் சொந்த மக்கள் மேலேயே சிலர் பாய்ச்சத் துணிவார்களெனில், அவர்களை எந்தக் காரணம் கொண்டும் விட்டு வைக்கக் கூடாது என்பதே எனது துணிபு.
ஆம், நீரில் முங்கிக் கிடக்குமொரு சடலத்திருந்து ஆயிரமாயிரம் பாக்டீரியாக்கள் உண்டாகும் என்றும், அது பலப்பல வியாதிகளை பரப்பும் என்றும், வாந்தி – பேதி – கடும் சுரம் என பற்பல உடல் உபாதைகளை உண்டாக்கி ஊராரின் உயிருக்கு கேடு விளைவித்துவிடக் கூடுமென்றும் அச்சப்படுகிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள்.

மேலும், சக மக்களின் மேல் நம்பிக்கையிழந்து போகும் ஊர் மக்களுக்கு மனதளவிலது வாழ்நாள் போராட்டமாகி விடக் கூடுமெனவும் கவலை தெரிவிக்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
அந்தத் தாக்குதலை உள் நாட்டு சதி எனிலும் அது தகும். அந்த சதியினை ஊடாடி கருவறுப்பது உளவுத்துறையின் பொறுப்பாகும்.
இவர் தான் எங்கள் தலைவர் என நம்பி ஓட்டுப் போட்ட மக்கள் மன்றம் உளவுத்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சரைத்தானே கேள்வி கேட்கும்.
கடந்த ஆட்சியில், இது போன்றொரு இழவு ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் தொட்டி ஒன்றில் கிடந்தது. அது நாற்பது வயதான சுதாகர் என்பவரின் சடலம் என்றது 2019 ஜனவரி 10 ஆம் தேதியிட்ட அந்த செய்தி.
ஆனால், அது குறித்து எந்த அதிர்ச்சியும் அன்று எழவில்லை. காரணம், அது இப்படியும் அப்படியுமாக அல்லாடியதொரு அடிமையாட்சி.
முந்தையர்களின் அடிமை ஆட்சியைக் காட்டிலும் – மு.க. ஸ்டாலின் தலைமையிலான இன்றைய ஆட்சி மேன்மையானது என தமிழ்நாட்டின் மக்கள் நம்பி இருக்கின்றார்கள்.
முதலமைச்சரே விரைந்து செயலாற்றுங்கள்.
ஒருதுளி விஷம் வைத்து ஒருவரைக் கொல்பவன் தூக்கு தண்டனைக்கும் ஆயுள் தண்டனைக்கும் உரியவன் எனில்,
ஊருக்கு பொதுவானதொரு குடிநீர் தொட்டிக்குள் விஷம் வைத்து ஓராயிரம் உயிர்களைக் கொல்லத் துணிபவனுக்கு என்ன தண்டனை என்பதை சட்டத்தின் மாட்சி கொண்டும் அதிகாரத்தின் துணை கொண்டும் நியாயத் தீர்ப்பு ஒன்றை வழங்குங்கள்.
இந்த ஆட்சி நிலைபெற்று விடக்கூடாதென எண்ணும் சிலர் எந்த அளவுக்கும் செல்வார்கள். பாதிக்கப்பட்ட சாதியை அல்லது அதற்கு எதிர் சாதியை பாழரசியல் செய்பவர்கள் மூளைச் சலவை செய்யத்தான் செய்வார்கள்.
அதனால் கெடும் சமூக அமைதி நாட்டை பாதிக்கும். சற்றும் அதற்கு இடம் கொடாதீர்கள்.
இருதரப்புக்கும் பொதுவான முதலமைச்சராக நின்று நியாயமான முடிவொன்றை நீங்கள் எடுத்துச் சொன்னால் இருதரப்பு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர்களும் உங்களை ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்!
தண்ணீரை பழிப்பது தாயைப் பழிப்பதற்கு சமமாகும் என்பது முன்னோர் வாக்கு. குற்றவாளிகளை தண்டிக்கத் தயங்காதீர்கள்.
அப்பாவி மக்களின் நன்னீரை குறிவைக்கும் சமூக விரோதிகளை ஜனநாயக கோல் கொண்டு அடித்து வீழ்த்துங்கள்.
புறநானூற்றுப் புலவரின் வரிகளுக்கு புகழ் சேர்த்து வையுங்கள்!
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.