போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

தமிழகம்

பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஜனவரி 5-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது பணியில் உள்ள 1,25,000 தொழிலாளர்கள், பணி ஓய்வு பெற்ற 91,000 ஓய்வூதியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அகவிலைப்படி நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு நடைமுறையில் இருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

காலி பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பதிவு செய்த அனைவருக்கும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை உடனடியாக வழங்க வேண்டும். 18-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையைத் தொடக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பல முறை தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச்சங்கங்கள் சார்பாக அரசு அதிகாரிகள், கழக அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை.

பணி ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு மாறாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைகளிலும் உரிய தீர்வு காணாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

எனவே, நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பை வழங்குகிறோம்.

கோரிக்கைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஜனவரி 5-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்:  படியாமல் நிற்கும் கூந்தலை வீட்டிலேயே படிய வைக்கலாம்!

கிச்சன் கீர்த்தனா: தூதுவளை ஸ்பாஞ்ச் தோசை

+1
0
+1
1
+1
1
+1
15
+1
2
+1
3
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *