வாகன ஓட்டிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 1) நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 67 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் இரண்டு முறை தேசிய நெடுஞ்சாலை துறையால் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. 1992 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அப்போது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்தது.
இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் 42 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்துக்கான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை கட்டணம் உயர்ந்தது.
இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது.
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, எலியார்பட்டி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா, திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலிருந்து வாடகை கார் ஓட்டும் ஓட்டுநர் ஒருவர் சுங்க கட்டணம் உயர்வு குறித்து கூறுகையில், “காருக்கான மாதாந்திர கட்டணம் இன்று ரூ.3,100ஆக அதிகரித்துள்ளது. இப்படி கட்டணத்தை உயர்த்தும்போது அதை வாடகைக்கு வரும் மக்களிடமிருந்து தான் வசூலிக்க வேண்டியுள்ளது. காருக்காவது பரவாயில்லை, லோடு வண்டிகளுக்கு கட்டணம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய விலைப் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மற்றொரு வாகன ஓட்டி கூறுகையில், “சுங்கச்சாவடிகளில் இருந்து சிறிது தொலைவு வரைதான் சாலைகள் நன்றாக இருக்கின்றன. அதற்கு மேல் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அதிகளவு கார் பைக் உள்ளிட்டவை விபத்தில் சிக்குகின்றன. ஆனால் இவற்றை சரி செய்யாமல் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துகின்றனர்” என்று கூறினார் .
இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில வாரியாக வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடி கட்டணங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு கேட்கும் ஜம்மு – காஷ்மீர் மூன்றாம் பாலினத்தவர்கள்!
சிலிண்டர் விலை உயர்வு : ரூ.1,855க்கு விற்பனை!